Published : 07 Jan 2020 09:52 AM
Last Updated : 07 Jan 2020 09:52 AM

ஓசூர் ஆர்டிஓ சோதனைச் சாவடியில் ஓட்டுநர்களிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்ற லாரி உரிமையாளர் சங்கத்தினர்: சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ

ஓசூர் ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனைச்சாவடியில் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தென்னிந்திய லாரி உரிமையாளர் நலசங்க துணைத் தலைவர் செந்தில்குமார்.

ஓசூர் ஆர்டிஓ சோதனைச்சாவடி பகுதியில் லாரி ஓட்டுநர்களிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்ட தொகையை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் பெற்று மீண்டும் லாரி ஓட்டுநர்களிடம் தரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஓசூர் வழியாக தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. இதற்காக பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் ஜூஜூவாடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன சோதனைச்சாவடி உள்ளது.

இச்சோதனைச் சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், விதிகளை மீறும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், ஓசூர் ஆர்டிஓ சோதனைச் சாவடி வழியே செல்லும் வெளிமாநில வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க, ஓட்டுநர்களிடம் ஆவணங்களைக் கேட்டு பணம் வசூல் செய்யும் பணியில் வெளி ஆட்கள் சிலர் ஈடுபட்டு வருவதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இச்சோதனைச்சாவடி வழியாகச் சென்ற லாரி ஓட்டுநர்களிடம் சட்டவிரோதமாக ஆவணங்கள் கேட்டு சிலர் கட்டாயமாக பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாகச் சென்ற புதுச்சேரி லாரி உரிமையாளர் நலச்சங்கத் தலைவரும், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவருமான செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், பணியில் இருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரனிடம் விசாரித்தனர். அப்போது அவர் தாங்கள் பணம் வசூலிக்கவில்லை எனக் கூறியுள்ளார். விசாரணையில், பணத்தை வசூல் செய்தவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்பதும், வசூல் செய்பவர்கள் வெளி ஆட்கள் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், இதுதொடர்பாக ஆய்வாளரிடம் விதிமுறைகளைக் கூறி கேள்வி எழுப்பினார்.

மேலும், லாரி ஓட்டுநர்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதோடு பணத்தையும் திரும்பப் பெற்று ஓட்டுநர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வுகள் அனைத்தும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, செந்தில்குமார் கூறியதாவது: 30 ஆண்டுகளாக லாரி தொழில் செய்து வருகிறேன். தற்போது லாரி உள்ளிட்ட எல்லா வாகனத்தின் விவரங்களையும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் வாகனத்துக்கான காப்பீடு, வரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வாகனத்தின் எண்ணை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

இதனால் ஆர்டிஓ வாகன சோதனையில் ஆவணங்கள் கேட்டு சோதனை செய்யக் கூடாது. இந்நிலையில், ஓசூர் ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடியில் சோதனை என்கிற பெயரில் லாரி ஓட்டுநர்களிடம், குண்டர்களை வைத்து கட்டாயமாக பணம் வசூல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி காலை நேரடியாகச் சென்று வெளி ஆட்களை நியமித்து பணம் வசூல் செய்து கொண்டிருந்ததை கையும், களவுமாக பிடித்தோம். இதையடுத்து கடந்த 2-ம் தேதியில் இருந்து லாரி ஓட்டுநர்களிடம் பணம் வசூல் செய்வதை நிறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வர், வட்டாரப் போக்குவரத்து அலுவலக உயர் அலுவலர்கள், கிருஷ்ணகிரி ஆட்சியர், எஸ்பிஆகியோருக்கு பதிவு தபால் மூலம்புகார் மனு அனுப்பி உள்ளேன். மேலும், ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.

3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இச்சம்பவம் தொடர்பாக ஓசூர்வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சந்திரன், ஓசூர் சிப்காட்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் செந்தில்குமார் மற்றும் சிலர், தங்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிப்காட் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

- எஸ்.கே.ரமேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x