Published : 06 Jan 2020 12:31 PM
Last Updated : 06 Jan 2020 12:31 PM

தமிழக பாஜக அடுத்த தலைவர் யார்? - மாநில நிர்வாகிகளிடம் மேலிடப் பிரதிநிதிகள் கருத்துகேட்பு

தமிழக பாஜகவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் அக்கட்சியின் மேலிடப் பிரதிநிதிகள் நேற்று கருத்துகளை கேட்டறிந்தனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றால் தலைவர் தேர்வு தள்ளிப்போனது. இந்நிலையில் தலைவரை தேர்வுசெய்யும் பணிகளை பாஜக மேலிடம் தொடங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக கருத்து கேட்பு கூட்டம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், கே.எஸ்.நரேந்திரன், மாநில துணைத் தலைவர்கள் டி.குப்புராமு, நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர்கள் கே.டி.ராக வன், ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி, எஸ்.சி. அணி உள்ளிட்டதுணை அமைப்புகளின் தலைவர் கள் என 42 பேர் பங்கேற்றனர்.

இரு அமர்வுகளாக 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ், தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் ஆகியோர் மாநிலத் தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்னர் ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித்தனியாகவும் கருத்து கேட்டனர். கருத்துக் கேட்பு கூட்டம் முடிந்ததும் மாலை செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ், ‘‘மாநிலத் தலைவர்நியமனம் தொடர்பாக நிர்வாகி களின் கருத்துக்களை கேட்டறிந் தோம். இதனை கட்சியின் தலை வரிடம் எடுத்துரைப்போம். விரை வில் அறிவிப்பு வரும்’’ என்றார்.

தமிழக பாஜக தலைவராக தற்போதைய மாநில துணைத் தலைவர் டி.குப்புராமு நியமிக்கப் பட இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, "தலைவர் இல்லாததால் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு மூத்த துணைத் தலைவரான குப்புராமு தலைமை வகித்தார். அவரை மேடையில் பிரதானமாக அமர்த்தியிருந்ததால் அவர்தான் தலைவர் என்று சில ஊடகங்கள் செய்தி வெளிட்டுவிட்டன. யார் தலைவர் என்பதை மேலிடம் அறிவிக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x