Published : 03 Jan 2020 08:06 PM
Last Updated : 03 Jan 2020 08:06 PM

சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்க: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை தாக்கல் செய்ய கோரிய திமுக-வின் புதிய மனு குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களில் முடிவுகளை அறிவிக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், தேர்தல் விதிகளை முழுமையாக பின்பற்றி முறைகேடுகள் இல்லாமல் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசர வழக்கில் உள்ள கோரிக்கையை மீறி வேறு கோரிக்கைகளை திமுக முன்வைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தை ஏற்காடு அதிமுக எம்எல்ஏ மூடும் வீடியோவை அடிப்படையாக கொண்டு புகார் அளித்தும் மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சேலம், கரூர் மாவட்டங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது அவசியம் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

முறைகேடுகள் நடக்க அனுமதித்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தேர்தல் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுபுள்ளி வைக்க முடியும் எனவும் வாதிடப்பட்டது.திமுக-வின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற்றது என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்திற்கு சாட்சியாக வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்ததுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என அறிவுறுத்தினர்.

அதற்கு வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு நடைமுறைகள் முடியாததால் சிசிடிவி பதிவுகளை தற்போது தாக்கல் செய்ய முடியாது என்றும், வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த பிறகு சிசிடிவி பதிவுகள் மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதுகுறித்து விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் அதனை பொறுத்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பதிலாக தாக்கல் செய்வதற்காக விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x