Published : 03 Jan 2020 05:45 PM
Last Updated : 03 Jan 2020 05:45 PM

மறைமுக தேர்தலில் தலைவர் பதவிகளை கைப்பற்ற ‘குதிரைபேரம்’: கவுன்சிலர்களை தக்கவைக்க போராடும் திமுக, அதிமுக 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மறைமுக தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிகளை கைப்பற்ற அதிமுக, திமுகவினர், மாற்று கட்சி கவுன்சிலர்கள், சுயேட்சை கவுன்சிலர்களை இழுக்க திரைமுறைவு குதிரை பேரத்தை தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்தநிலையில் அதிமுக கூட்டணியுடன் ஒப்பிடும்போது திமுக கூட்டணி இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 23 மாவட்ட கவுன்சிலர்கள், 212 ஒன்றிய கவுன்சிலர்கள், 394 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 2,299 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 9 பேரும், திமுக 13 மற்றும் அதன் கூட்டணி ஒரு இடத்தையும் பெற்றது. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 89 இடங்களையும், திமுக 92 இடங்களையும், அமமுக 7 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும், பாஜக 3 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், மற்றவை 14 இடங்களையும் கைப்பற்றின.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியதால் அக்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளர் மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்(மாவட்ட பஞ்சாயத்து தலைவர்) தேர்தலில் வெற்றி பெறுவார்.

ஆனால், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஒரளவு திமுகவும், அதிமுகவும் சரிக்கு சமமான வெற்றியை பதிவு செய்துள்ளதால் மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிகளில் இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக இடையே ஏற்பட்டுள்ளது.

தூண்டில்..

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரே ஒரு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி உண்டு. அதில், மாவட்டம் முழுவதும் வெற்றிபெறும் மாவட்ட கவுன்சிலர்கள்(ஒன்றிய குழு உறுப்பினர்கள்) ஒன்று கூடி மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இதில், பெரும்பான்மை மாவட்ட கவுன்சிலர்களை பெறும் கட்சியைச் சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக தேர்ந்தெடுப்படுவார்.

அதுபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றிய குழு தலைவர் பதவிகள் உண்டு. ஒவ்வொரு ஒன்றியதிலும் வெற்றிப்பெறும் ஒன்றிய கவுன்சிலர்கள் கூடி, மறைமுக தேர்தலில் ஒன்றிய குழு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.

மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பது தெரியாது. மறைமுக தேர்தலில் வெற்றி வாய்ப்பு நெருக்கமாக இருக்கம் கட்சிகள், சுயேட்சைகள், மற்ற கட்சி வேட்பாளர்களை ஆசைவார்த்தைகளை கூறி இழுக்க வாய்ப்புள்ளது.

அதனால், திமுக, அதிமுக கவுன்சிலர்களே மறைமுக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர்கள் கட்சி வேட்பாளர்கள் பிடிக்காவிட்டால் அவர்களுக்கு வாக்களிக்காமல் மாற்றிப்போடவும் வாய்ப்புள்ளது. அதனால், மறைமுக தேர்தல் முடியும் வரை திமுக, அதிமுக கட்சிகளே, தங்கள் கட்சி கவுன்சிலர்கள், தங்களுக்கு ஆதரவாக நிற்கும் கவுன்சிலர்களை தக்க வைக்கப்போராடும்.

ஆசைவார்த்தை.. ரகசிய இடம்..

அதற்காக அவர்களை மாற்று கட்சியினர் தொடர்பு கொள்ள முடியாதபடி, ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைப்பார்கள். வெற்றிவாய்ப்பு ஓரிரு வாக்குகள் அடிப்படையில் இருக்கும்போது, சுயேட்சைகளுக்கு கிராக்கி கூடிவிடும். அவர்களுக்கு துணைத்தலைவர் பதவியுடன் கவனிப்பதாக கூறுவார்கள் அல்லது கான்டிராக்ட் உள்ளிட்ட விஷயங்களை தாராளமாக செய்து தருவதாக கூறுவார்கள்.

இப்படி மாவட்ட பஞ்சாயத்துக்குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மறைமுக தேர்தலில் திரைமறைவு குதிரை பேரம் நடக்கும். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் தலைவர் பதவிகளை கைப்பற்ற கவுன்சிலர்களை இழுக்கவும், தக்க வைக்கவும் குதிரை பேரத்தை தொடங்கிவிட்டதால் மறைமுக தலைவர் பதவி தேர்தல் பரபரப்பு தற்போதே தொடங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x