Published : 02 Jan 2020 01:18 PM
Last Updated : 02 Jan 2020 01:18 PM

பிரதமருக்குச் சேவை செய்து மகிழ்விக்க பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள்: ஸ்டாலின் கிண்டல்

மாட்டுப் பொங்கல் அன்று பிரதமர் பேசுகிறார் என அறிவித்து மாணவர்களைப் பள்ளிக்கு அழைக்கும் அரசு உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. இந்நிலையில் பிரதமர் பேசும் தேதியும் மாற்றப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டாலின் பிரதமருக்காக பண்டிகையை மாற்றிவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பள்ளி மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து மாட்டுப் பொங்கல் அன்று உரையாற்றவிருந்தார். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு அன்று வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கட்டாயமில்லை என முதல்வர் பதிலளித்தார்.

பின்னர் இந்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை நேற்று வாபஸ் பெற்றது. இந்நிலையில் பிரதமர் மாணவர்களிடையே உரையாடும் நிகழ்ச்சியின் தேதி மாற்றப்பட்டு ஜன.20 என அறிவிக்கப்பட்டது. அன்று பள்ளி வேலை நாள் என்பதால் எந்தப் பிரச்சினையும் எழவில்லை.

பிரதமரின் பேச்சு தேதி மாற்றப்பட்டதை அடுத்து ஸ்டாலின் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவு:

“ ‘பிரதமர் பேசப் போகிறார்' என்று தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் நாளன்று பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து, மத்திய பாஜக அரசிடம் தொடர்ந்து குளிர் காய நினைத்த, அதிகார அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தேன். உடனடியாகப் பூசி மெழுகும் காரணம் சொன்னது எடப்பாடி அரசு. இதோ 20-ம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர்.

அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x