Published : 31 Dec 2019 08:33 AM
Last Updated : 31 Dec 2019 08:33 AM

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளானூர் ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்கள். படம்: பு.க.பிரவீன்

சென்னை 


நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளரான செந்தில் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் இதுவரை நகர்ப்புற, ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாகவே நடத்தப்பட்டது. ஆனால் தற்போது 27 மாவட்டங்களில், அதிலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மற்ற 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கும், மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.

எனவே நகர்ப்புறங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரகப் பகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சிவஞான சம்பந்தம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன், தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

ஊரகப் பகுதிகள், நகர்ப்புறம் என 2 கட்டங்களாக தேர்தல் முடிவுகளை வெளியிட சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x