Published : 30 Dec 2019 06:44 PM
Last Updated : 30 Dec 2019 06:44 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான பேரணி; ஸ்டாலின் உள்ளிட்ட 14,125 பேர் மீது வழக்குப் பதிவு:  தடை கேட்ட வழக்கு முடித்து வைப்பு

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 14,125 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடந்த 23-ம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி எழிலரசு என்பவர் உள்ளிட்ட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி பேரணி நடக்கும்பட்சத்தில் அதை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு முழுவதுமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காவல்துறை சார்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ''2காவல்துறையின் தடையை மீறி பேரணி சென்றதற்காக எழும்பூர் ( F2 ) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஸ்டாலின் உட்பட திமுகவினர் 8 ஆயிரம் பேர் மீதும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 500 பேர் மீதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உட்பட 600 பேர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட 1,225 பேர் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட 950 பேர் மீதும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யா உட்பட 400 பேர் மீதும், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உட்பட 950 பேர் மீதும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட 100 பேர் மீதும், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், ஐஜெகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் உட்பட 250 பேர் மீதும், எஸ்டிபிஐ நெல்லை முபாரக் உள்ளிட்ட 300 பேர் மீதும் , ஐயூஎம்எல், உல்மா பேரவை ஐஎன்டிஜே அமைப்புகளின் தலைவர்கள் காதர் மொய்தீன், எஸ்.எம். பாக்கர் உள்ளிட்ட 850 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

பேரணி நடத்தியது, அதில் பங்கேற்றது தொடர்பாக அனைவர் மீதும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும், அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்ற மாநிலங்களைப் போல் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் காவல்துறை விழிப்புடன் செயல்பட்டதால்,பேரணியில் கலவரம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது'' என்று தெரிவித்தார்.

காவல்துறையின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x