Published : 29 Dec 2019 05:13 PM
Last Updated : 29 Dec 2019 05:13 PM

காமராஜர் சிலைக்கு அவமரியாதை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் வெண்கல சிலைக்கு அவமதிப்பு நிகழ்ந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் வெண்கல சிலைக்கு நேற்று இரவு சமூக விரோதிகள் செருப்புமாலை அணிவித்து இழிவுபடுத்தி அவமதித்திருக்கிறார்கள்.

இத்தகைய படுபாதக செயலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய மனிதப் புனிதர் பெருந்தலைவர் காமராஜரின் சிலையை அவமதித்து இழிவுபடுத்திய சமூக விரோதிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் வன்னியராஜ் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை காவல்துறையினர் எவரையும் கைது செய்யாதது கடுமையான கண்டனத்திற்குரியது.

எனவே, பெருந்தலைவர் காமராஜர் சிலையை அவமதித்து இழிவுபடுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.

என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x