Published : 28 Dec 2019 02:20 PM
Last Updated : 28 Dec 2019 02:20 PM

மாட்டுப்பொங்கலுக்கு பள்ளி; இப்போது மறுப்பு தெரிவிக்கும் நீங்கள் ஆணையாக வெளியிடவேண்டிய அவசியம் என்ன?- முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

பிரதமர் உரைக்கேட்க மாட்டுப்பொங்கலன்று பள்ளிக்கு வருவது அவசியமில்லை என மறுப்பு தெரிவிக்கும் முதல்வரும், அமைச்சரும் பின் எதற்காக வரவேண்டும் என்பதை ஆணையாக பிறப்பித்தீர்கள் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்..

ஜனவரி 16ம் தேதி, அதாவது பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியானது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார்.

ஜனவரி 16ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாடப்போகிறார். இதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதனால் மோடியின் உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஜனவரி 16-ம் தேதி விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதை பெற்றோர்கள், மாணவர் தரப்பில் கேட்டு விமர்சனம் செய்தனர்.

பொங்கல் விடுமுறை நாளில் பலரும் சொந்த ஊருக்குச் சென்றிருப்பார்கள். விடுமுறை தினத்தில் வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கும். இந்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வந்ததை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

தமிழர்கள் பண்டிகையை மகிழ்ச்சியை கெடுக்கும் விதத்தில் இது அமைந்துள்ளது. இன்டெர்நெட் யுகத்தில் மாணவர்கள் எங்கிருந்தும் பிரதமர் உரையைக் கேட்கலாம். ஆனால் இவ்வாறு பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவது சரியல்ல என ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மீறி அமல் படுத்தினால் திமுக மாணவர் இயக்கம் மூலம் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில், “பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என விளக்கமளித்தார்.

16-ம் தேதி மாணவர்கள் பள்ளி வருவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் முதலில் ஒன்றை அறிவித்துவிட்டு தற்போது இல்லை என்று எப்படி மறுக்கிறீர்கள் அப்படியானால் ஏன் ஆணையாக வெளியிட்டீர்கள் என ஸ்டாலின் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்?” .

முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்.

என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x