Published : 27 Dec 2019 04:19 PM
Last Updated : 27 Dec 2019 04:19 PM

வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிப்பு: சிவகங்கையில் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்

சிவகங்கையில் வாக்குச்சாவடிக்குள்ளேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே சிலந்தங்குடி அதிமுக கிளைச் செயலாளராக இருப்பவர் தங்கவேலு. இவர் இன்று காலை வாக்குச்சாவடி அருகிலேயே நின்றுகொண்டு உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது,அங்குவந்த அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன் என்பவர் தங்கவேலுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடனே, அவர் தங்கவேலுவை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவரின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமணையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இதேபோல் மஹாசிவனேந்தல் அருகேவுள்ள ஆலங்குடி வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் முகவர்களான ஸ்ரீநிவாசன், தனசேகரன் மற்றும் எதிர் வேட்பாளர் புனிதா என்பவரின் கணவர் ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குச்சாவடிக்குள் நின்று வாக்கு சேகரிப்பதாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஸ்ரீநிவாசன் மற்றும் தனசேகரன் ஆகிய இருவருக்கும் கை முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் அதிமுக சார்பில் ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் மஞ்சுளா பாலச்சந்திரன் என்பவர் வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்ததால் எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர். இதேபோல் அந்த ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்குள்ளேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x