Last Updated : 27 Dec, 2019 02:10 PM

 

Published : 27 Dec 2019 02:10 PM
Last Updated : 27 Dec 2019 02:10 PM

மதுரை ஒத்தக்கடையில் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு: விதிமுறை மீறி அமைக்கப்பட்ட கட்சி பூத்கள் அகற்றம்

மதுரை ஒத்தக்கடை வாக்குச்சாவடியில் காலையில் சலசலப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, நரசிங்கம் சாலையில் விதிமுறையை மீறி வரிசையாக பல்வேறு கட்சியினரும் பூத்கள் அமைத்திருந்த நிலையில் அவற்றை போலீஸார் மூலம் அகற்றி எஸ்.பி. நடவடிக்கை எடுத்தார்.

மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிங்களில் உள்ள 1,407 பதவிகளுக்கு முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுடன் தொடங்கியது.

மதியம் 1 மணி நிலவரப்படி மதுரையில் 45.91% வாக்குப்பதிவாகியுள்ளது.

முன்னதாக திருமோகூர் வாக்குச்சாவடியில் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவு, ஒத்தக்கடையில் திமுக வேட்பாளர் வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரையில் 910 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக 2500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு சிறு சர்ச்சைகள் தவிர பெரிய அளவில் அசம்பாவதிங்கள் ஏதும் நடைபெறவில்லை. ஒத்தக்கடையில் திமுக வேட்பாளர் வாக்கு மையத்தில் ஓட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது. அது குறித்து காவல்துறைக்கு புகார் ஏதும் வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நரசிங்கம் சாலையில், விதிமுறைகளை மீறி அனைத்து ஒரே அரசியல் கட்சி 3,4 பூத்கள் வரை அமைத்திருந்தது. அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பூத்தில் 4 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்குள் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக, காலையில் ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் வாக்கு மையத்திலேயே வாக்கு சேகரித்துள்ளார். அந்நேரம் மாவட்ட ஆட்சியர் ரோந்துப் பணியில் இருந்ததால் அதிமுகவினர் அவரிடம் புகார் அளித்துள்ளனர். ஆட்சியர் உத்தரவின் பேரில் திமுக வேட்பாளர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x