Published : 27 Dec 2019 09:52 AM
Last Updated : 27 Dec 2019 09:52 AM

தினமும் சேகரமாகும் ஒரு டன் காய்கறி கழிவுகளைக் கொண்டு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் இயற்கை உரம் தயாரிப்பு தொடக்கம்; மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தினசரி சேகரிக்கப்படும் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு, கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் இயற்கை உரம் தயாரிப்புப் பணி தொடங்கியுள்ளது.

கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் அருகே கவுலி பிரவுன் சாலையிலுள்ள உழவர் சந்தையில் 220-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, நேரடியாக இங்கு கொண்டுவந்து மக்களுக்கு விற்கின்றனர். தினசரி அதிகாலை 4.30 முதல் காலை 11 மணி வரை இச்சந்தை செயல்படு கிறது. தினமும் சில ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

இச்சந்தையில் தினசரி வியாபாரத்துக்கு் பின், 1000 கிலோ (ஒரு டன்) அளவுக்கு காய்கறிக் கழிவுகள் தேங்குகின்றன. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டி வந்தனர். இக்காய்கறிக் கழிவுகளைக் கொண்டு, இயற்கை உரம் தயாரிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதற்காக, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை வளாகத்தில் சுமார் 5 சென்ட் பரப்பில் 18 தொட்டிகளுடன் தினசரி 3 டன் உரம் உற்பத்தி செய்யும் வகையில், இயற்கை உரம் தயாரிப்பு மையம் கட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, இந்த மையம் காந்திபார்க்கை சேர்ந்த சிவசக்தி மகளிர் சுய உதவிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள், சில தினங்களுக்கு முன் உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை உரம் தயாரிப்புப் பணியை தொடங்கியுள்ளனர்.

30 முதல் 60 நாட்களில் தயார்

இதுகுறித்து மகளிர் சுயஉதவிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.மங்கள கவுரி கூறும்போது, ’’இந்த மையத்தினுள் கழிவுகளை மக்கி, உரமாக்க 18 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கழிவுகளை சிறுதுண்டாக்க இயந்திரம் பொருத்தப் பட்டுள்ளது.

உழவர் சந்தையில் வார நாட்களில் தலா ஒரு டன்னும், சனி, ஞாயிறு நாட்களில் தலா சுமார் 1.20 டன்னும் காய்கறிக் கழிவுகளை சேகரித்து, உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பணி தொடங்கிய முதல் நாளில் இருந்து கழிவுகளின் தன்மைக்கேற்ப 30 முதல் 60 நாட்களில், ரசாயனமற்ற சுத்தமான இயற்கை உரம் தயாராகிவிடும். தினமும் அனைத்து வித காய்கறி கழிவுகள் கிடைத்தாலும், வெண்டை, கத்தரி, கீரை வகைகள், கொத்தமல்லி கழிவுகளே அதிகளவில் கிடைக்கின்றன. இதுதவிர, இந்த சந்தைக்கு சுற்றுப்புறங்களில் உள்ள சில பூங்காக்களில் இருந்து தினசரி 2 மூட்டை இலை, தழை உள்ளிட்ட தோட்டக் கழிவுகள் கொண்டு வரப்படுகின்றன.

காய்கறிக் கழிவுகளுடன் இவற்றையும் சேர்த்து உரம் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது.

இப்பணியில் 2 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் எங்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினர் 6 பேர் என மொத்தம் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

விற்பனை செய்ய முடிவு

மாநகராட்சி உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘உழவர் சந்தை வளாகத்திலுள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில், பணியில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள சில வார்டுகளில் சேகரமாகும் மரங்களின் இலை, தழைக் கழிவுகளையும் சேகரித்து உரம் தயாரிப்பு பணிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாநகரிலுள்ள மற்ற உழவர் சந்தைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x