Published : 26 Dec 2019 08:42 PM
Last Updated : 26 Dec 2019 08:42 PM

பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தில் முறைகேடு புகார்: உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய திரைப்பட, சின்னத்திரை பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தில் முறைகேடு குறித்த புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட, சின்னத்திரை பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தில் முறைகேடு குறித்த புகார் மீது நடவடிக்கைக் கோரி மயிலை எஸ்.குமார், டி.சிஹிமோல், வி.காளிதாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “தென்னிந்திய திரைப்பட, டி.வி. தொடர் கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறோம், அதன் தலைவராக ராதாரவி, பொருளாளராக ராஜகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

ஏராளமான நிதிமுறைகேடுகள் நடந்துள்ளது குறித்து சங்கத்தின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும், நிர்வாகிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருவது இல்லை. வரவு-செலவு கணக்கு புத்தகத்தை உறுப்பினர்கள் பார்வையிட சட்டப்படி எந்த தடையும் இல்லை என்றாலும், அவற்றை பார்வையிட அனுமதிப்பது இல்லை.

இதுவரை உறுப்பினர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ, திருமண உதவிகள் குறித்த விவரம் கேட்டாலும் தருவது இல்லை, ஆண்டு சந்தாவாக உறுப்பினர்களிடம் ரூ.180 மற்றும் ரூ.200 வசூலித்தாலும்,வெறும் ரூ.120 மட்டுமே வரவு வைக்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் நன்கொடையாக சங்கம் வசூலித்துள்ளது என்று ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆவணங்களில் 4 லட்சத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற ஏரளாமான நிதி முறைகேடுகள் நடந்துள்ளது.

இது குறித்து கடந்த ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் தொழில் சங்கங்களின் கூடுதல் பதிவாளருக்கு புகார் மனு கொடுத்துள்ள சூழ்நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியாது என்பதால், இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு சமர்பித்து அதனடிப்படையில் தான் தீர்வு காண முடியும் என அறிவுறுத்தினார்.

அதன்படி, ஜூன் 11-ந்தேதி, நவம்பர் 18-ந்தேதி கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில், இருதரப்பினர்களும் தரும் ஆதாரங்கள், ஆவணங்களை பரிசீலித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x