Published : 26 Dec 2019 05:43 PM
Last Updated : 26 Dec 2019 05:43 PM

பதவி உயர்வுக்காக மருத்துவப் பேராசிரியர்கள் காத்திருக்க கொல்லைப்புறமாக ஓய்வுப்பெற்றவர்களை நியமிப்பதா?- அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கேள்வி

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணி உயர்வுக்காக பேராசிரியர்கள் காத்து இருக்கையில், கௌரவ அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களை பணிநியமனம் செய்யவதை கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுதியுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனம் என்பது கவுன்சிலிங் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது. பணி அனுபவம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது தமிழக அரசின் , மருத்துவக் கல்வி இயக்ககம் ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில்,சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக் குழுவின் மூலம் ,தற்காலிகமாக கௌரவப் பேராசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது கடும் கண்டனத்திற்குரியது.

சென்ற அக்டோபர் மாதம் ,நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எம்சிஐ விதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது, உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எட்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.

அந்தப் போராட்டத்தை நசுக்கியதோடு,அவர்களின் கோரிக்கைகளையும் அரசு இதுவரை நிறை வேற்றவில்லை.இன்னும் சொல்லப்போனால், போராடிய மருத்துவர்களை பழிவாங்கும் நோக்குடன் இடமாறுதல் செய்ததுடன், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களை, மாவட்ட மருத்துவமனைகளுக்கும்,வட்டார மருத்துவமனைகளுக்கும் இட மாறுதல் செய்து, தமிழக அரசு ஆட் குறைப்பு செய்தது.

ஏராளமான அரசு மருத்துவர்கள் பதவி உயர்வுக்காகவும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பேராசிரியர் பற்றாக்குறை என்ற பொய்யான காரணத்தைக் கூறி, ஏற்கெனவே பணியில் உள்ள அரசு மருத்துவர்களை விடுத்து, வெளியில் உள்ள தனியார் மருத்துவர்களையும்,ஓய்வு பெற்றவர்களையும்,வெளிமாநிலத்தவரையும், வெளிநாட்டினரையும் பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழக அரசு முயல்கிறது.

இது நீண்ட காலமாக, அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிரானது. தற்பொழுது,பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்புள்ள, இணைப் பேராசிரியர்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பணியில் நீண்டகாலமாக உள்ள அரசு மருத்துவ இணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓய்வு பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது ,இணைப் பேராசிரியர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

மருத்துவப் பணியாளர் நியமன ஆணையம் (எம்ஆர்பி) என்ற அமைப்பை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் மருத்துவர்களை நியமிக்காமல் நேரடியாக கௌரவ அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஊழல்களுக்கும் , முறைகேடுகளுக்கும், பாரபட்சப் போக்குகளுக்கும் வழி வகுக்கும்.

அரசுப் பணிக்கு, குறைந்த ஊதியத்தில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கமும்,அவர்களின் உழைப்புச் சக்தியை (labour power) சுரண்டும் நோக்கமும் இத்தகைய பணிநியமனங்களில் அடங்கியுள்ளது.

இப்பணி நியமனம் மூலம் தமிழக அரசு, தனது மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் பணியிடங்களை கூட்டாமல், இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI ) விதி முறையை காரணம் காட்டி ,சுமார் 800 பணியிடங்களை தமிழக அரசு ஒழித்துக் கட்டியுள்ளது. இந்த ஆட்குறைப்பு 4 D (2) ஆணையை அரசு இதுவரை ரத்து செய்யவில்லை.

இந்நிலையில், பேராசிரியர்கள் பற்றாக் குறை எனக் காரணம் கூறி, இந்த கௌரவ மருத்துவர்கள் பணிநியமனம் என்பது மோசடித்தனமாகும். மக்களை ஏமாற்றும் செயலாகும் .இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும். இப்பணி நியமனங்களை கல்லூரிகளே மேற்கொள்வதால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படும்.

கௌரவ மருத்துவப் பேராசிரியர்களுக்கு, ஒரு நிரந்தர மருத்துவருக்கு உடைய பொறுப்புகள் ( responsibility and accountability) இருக்காது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.கௌரவ மருத்துவர்கள் பணி நியமனம் ,அரசு மருத்துவ மனைகளின் கட்டமைப்பை சீர் குலைத்து விடும்.சேவைத் தரத்தை பாதிக்கும்.

எனவே, உலக வங்கியின் நிர்பந்தத்திற்கு அடி பணிந்து,தமிழக அரசு கௌரவ மருத்துவர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். அரசு டாக்டர்கள் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நினைவேற்ற வேண்டும். அவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள்,இட மாறுதல்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x