Published : 25 Dec 2019 02:42 PM
Last Updated : 25 Dec 2019 02:42 PM

உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் செயல்படுங்கள்: அமமுக தொண்டர்களுக்கு தினகரன் கடிதம்

உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் செயல்படுங்கள் என்று அமமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியாகியுள்ள கடிதத்தில், ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நமது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திட நீங்கள் தேனீக்களாகச் சுற்றிச் சுழன்று பணிபுரிந்து வரும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிப் பாதுகாத்த அ.தி.மு.க.வை தங்களது சுயநலத்திற்காக அடிமைப்படுத்தியவர்களிடம் இருந்து மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தை ஆரம்பித்தோம். அதை சட்டரீதியாகப் பதிவு செய்ய நாம் முயன்றபோது, துரோகிகள் நமக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்தப் பணியை தாமதப்படுத்தினார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கிய அந்த நேரத்தில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உங்களிடம் இருந்த எழுச்சியை அறிந்து சுயேட்சை என்ற அடையாளத்துடனாவது உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்று அறைகூவல் விடுத்தோம். நமது இயக்கத்திலிருந்து சில பேர், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும் வெளியேறியபோதும் லட்சோப லட்சம் உண்மைத் தொண்டர்கள் இந்த இயக்கத்திலேயே கொள்கைப் பிடிப்போடு தொடர்ந்து பயணிக்கிறார்கள்.
ஆனால், அதை அறிந்திருந்தும் கோயபல்ஸ் பாணியில் நாம் கரைந்துவிட்டோம், காணாமல் போய்விட்டோம் என்று சொல்லி எள்ளி நகையாடியவர்கள் எல்லாம், உள்ளாட்சித் தேர்தலை உறுதியோடு சந்திப்போம் என்று நாம் விடுத்த அறைகூவலைக் கண்டு அரண்டுபோனார்கள் என்றால் அது மிகையல்ல.

ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக ஆட்சி நடத்திவரும் இன்றைய அ.தி.மு.க., மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நிற்கிறது. அதனால்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்பாமல், புதுப்புது சட்டங்கள், விதிமுறைகளை அமல்படுத்தியும் எப்படியாவது தேர்தலை தள்ளிவைக்க முயற்சித்தும் முடியாமல், இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத வகையில் விசித்திரமாக தவணை முறையில் தேர்தலை அறிவிக்க காரண கர்த்தாவாக இருந்தனர்.

அதே நேரத்தில் நமது நிரந்தர எதிரியான தி.மு.க.வும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நிற்பதால், அவர்களும் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை விரும்பாமல், அடுத்தடுத்து நீதிமன்றம் சென்றார்கள். ஆனாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் இந்தத் தேர்தலில் எந்தவித சலனமோ, தயக்கமோ இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக நீங்கள் உற்சாகத்தோடு உழைத்து வருகிறீர்கள்.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்... ஆளும் அ.தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம், பணபலம், அச்சுறுத்தல் என அத்தனையையும் மீறி இந்தத் தேர்தலில் தமிழகம் முழுக்க, அனைத்து இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. இந்தப் பெருமைக்கு காரணமான உங்களின் உற்சாகமான பங்களிப்புக்கும், துணிச்சலுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், நமது இந்த எழுச்சியையும் உற்சாகத்தையும் சீர்குலைக்கும் முயற்சியில் ஆளும் கட்சியும், நமது எதிரியான தி.மு.க.வினரும் இறங்கக்கூடும். பணபலத்தையும், அதிகாரத்தையும் வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று தங்களின் வழக்கமான பாணியை ஆளும்கட்சி கடைப்பிடிக்க முயற்சிக்கும். அப்படிப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெறுபவர்கள், முழு மனதோடு நேர்மையாக ஊழலின்றி எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? என்ற யதார்த்தத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பிரச்சாரம் முடிந்தபின்னும் சுணக்கம் இல்லாமல், வாக்குப் பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

வாக்குப்பதிவு நாளன்று, நமது வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை ஒவ்வொரு நொடியும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வாக்குச் சீட்டு முறையில் இந்தத் தேர்தல் நடப்பதால், துரோகிகளும், நமது எதிரிகளும் அதிகார பலத்தையும் மற்றும் சமூக விரோதிகளை வைத்து முறைகேடுகளில் ஈடுபட பெருமளவில் வாய்ப்பு இருக்கிறது. இதை மனதில்வைத்து அது போன்ற முறைகேடுகள் நடைபெறாத வகையில் உறுதியுடனும் விழிப்புடனும் இருந்து நமது இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நமது இயக்கத்தின் மீது கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுக்க பல இடங்களில் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து, உங்களின் இடையறாத உழைப்பின் காரணமாக வெற்றிபெற இருப்பவர்களையும் சேர்த்து நேரில் சந்திக்க இருக்கிறேன். பெரும் வெற்றிகளை ஈட்டும் வகையில் வாக்குப் பதிவின் கடைசி நிமிடம் வரை விழிப்போடு இருங்கள் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x