Published : 25 Dec 2019 01:35 PM
Last Updated : 25 Dec 2019 01:35 PM

கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்ட அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: வாசன் வேண்டுகோள்

கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற ஊரகப் பகுதி உள்ளாட்சிகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வெற்றிக்கு பொது மக்கள் பேராதரவு தர வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சிக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ச.ம.க போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகளினுடைய வேட்பாளர்களின் வெற்றிக்கு த.மா.கா வினர் தொடர் பணியாற்றி வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊரகப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த மாதம் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் இருந்தால்தான் குக்கிராமம், கிராமம் உள்ளிட்ட பகுதிகளின் அடிப்படையான, அத்தியாவசிய, அவசிய மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதற்காக நடைபெற இருக்கின்ற இந்த முக்கியமான தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சியினர் எல்லோரும் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட தங்களின் பணியை சிறப்பாக மேற்கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தை ஆளுகின்ற அ.இ.அ.தி.மு.க கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொடுத்து கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சிக்கான முதற்கட்ட தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வெற்றிக்கு பொது மக்கள் பேராதரவு தர வேண்டும்.

மேலும் உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்பட அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள நாமெல்லாம் ஓரணியில் இருந்து செயல்பட்டு அ.இ.அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x