Published : 24 Dec 2019 12:58 PM
Last Updated : 24 Dec 2019 12:58 PM

அதிமுக அரசுக்கு காவல் அரணாக பணியாற்றுவோம்: எம்ஜிஆர் நினைவு நாளில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்பு

எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

எம்ஜிஆரின் புகழ் மென்மேலும் உயர்ந்திடும் வண்ணம் கட்சிப் பணிகளை ஆற்றுவோம் என, அவரது நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின், 32-வது நினைவு நாளான இன்று (டிச.24) சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்ஜிஆர் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்ற அதிமுகவினர்

அப்போது, "எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை, உயிரினும் மேலாகக் கருதி காப்போம். எம்ஜிஆரின் புகழ் மென்மேலும் உயர்ந்திடும் வண்ணம் கட்சிப் பணிகளை ஆற்றுவோம்.

எம்ஜிஆரின் ஜனநாயகக் கொள்கைகளைக் கட்டிக் காத்து, தமிழ்நாட்டில், தனிப்பட்டவரின் ஆதிக்கமோ, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆதிக்கமோ தலை தூக்குவதை முறியடித்து, ஜனநாயகப் பண்புகள் நிலைபெற்றிட ஓயாது உழைப்போம்.

எம்ஜிஆரின் எண்ணம் ஈடேறும் வகையில், கட்சித் தலைமைக்கு விசுவாசமாகவும், அதிமுக அரசுக்கு காவல் அரணாகவும் பணியாற்றுவோம்.

அதிமுகவும் அதிமுக அரசும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முழுமையாக வெற்றிபெறச் செய்திட, ஒற்றுமையாய் பணியாற்றுவோம்.

எண்ணற்ற மக்கள் நலப் பணிகளைச் செய்து, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கும், அதிமுக அரசின் அத்தனை சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, அரசுக்கு மேலும், மேலும் ஆதரவு பெருகிட உழைப்போம்.

ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடத்தின் அடிப்படையில், வீரத்துடன், விவேகத்துடன் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிட உழைப்போம்.

உள்ளாட்சித் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்போம்".

இவ்வாறு அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x