Published : 17 Dec 2019 11:00 AM
Last Updated : 17 Dec 2019 11:00 AM

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் படகு சவாரி

ஆர்.டி.சிவசங்கர்

பைகாரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே பைகாரா பகுதியில் அமைந்துள்ள அணை 100 அடி உயரம் கொண்டது.

இந்த அணையில் தேக்கி வைக்கப் படும் தண்ணீர், மின் உற்பத்திக்கு பிறகு வெளியேற்றப்படும்போது பைகாரா நீர்வீழ்ச்சி வழியாக மாயார் ஆற்றுக்கு செல்கிறது.இந்த நீர்வீழ்ச்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பைகாரா படகு இல்லம் திகழ்வதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்காக 20 மோட்டார் படகுகள், 5 அதிவேக மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 8 இருக்கைகள் கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.815, 10 இருக்கைகளுக்கு ரூ.935, அதிவேக மோட்டார் படகுக்கு (2 அல்லது 3 பேர்) ரூ.840 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து, தற்போது 96 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. படகு இல்லத்தின் படிக்கட்டுகள் பாதி தண்ணீரில் மூழ்கியதோடு, தண்ணீர் நீல நிறத்தில் கடல்போல காட்சி அளிக்கிறது.
வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். சிறிய மலைக் குன்றுகள், தீவு போல காணப்படும் அணைப் பகுதி, அடர்ந்து வளர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதி வழியாக படகு சவாரி செய்வது என சுற்றுலாப் பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சில சமயங்களில் கடமான், சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதைப் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. ரம்மியமாக உள்ள அணையில் தண்ணீரை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் படகில் செல்வது புது அனுபவமாக உள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.நீர்மட்டம் உயர்ந்து கடல்போலக் காட்சியளிக்கும் பைகாரா படகு இல்லத்தில், படகு சவாரி செய்ய காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.

படம்:ஆர்.டி.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x