Published : 13 Dec 2019 10:10 AM
Last Updated : 13 Dec 2019 10:10 AM

ஸ்டாலினுடன் காங்., கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு: உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. 27 மாவட்டங்ளைச் சேர்ந்த308 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5,090 ஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 5,605 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. இந்த இடங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து மாவட்ட அளவில் திமுக மாவட்டச் செயலாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு 5 முதல் 10 சதவீத இடங்களை மட்டுமே திமுக விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘பலமான வேட்பாளர்கள் இல்லை. பெண் வேட்பாளர்கள் இல்லை’ என்று பல்வேறு காரணங்களைக் கூறி கேட்கும் வார்டுகளை திமுக தர மறுப்பதாக கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று காலை சந்தித்துப் பேசினர். அப்போது கோவை, திருப்பூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வார்டுகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பது குறித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி உள்ளிட்டோர் ஸ்டாலினை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து 2 நாளில் சுமுக முடிவு எட்டப்படும். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இரு கட்சித் தலைமையும் பேசி சரி செய்வோம்’’ என்றார்.

ஸ்டாலினை சந்தித்தது குறித்து இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து மாவட்ட அளவில் திமுகவுடன் பேச்சு நடந்து வருகிறது. பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்து கூட்டணியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுடன் விவாதித்தோம்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று மாலை மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.

திமுக மாவட்டச் செயலாளர்களு டன் மாவட்ட அளவில் நடந்துவரும் தொகுதிப் பங்கீடு பேச்சில்எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x