சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகிறது புனித ஜார்ஜ் கோட்டை

சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகிறது புனித ஜார்ஜ் கோட்டை
Updated on
1 min read

சுதந்திர தின கொண்டாட்டத்துக் காக தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை தயாராகி வருகிறது.

நாட்டின் 69-வது சுதந்திர தின விழா, வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 8.50 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைக்கிறார். பின்னர் முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.

அதைத் தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், சிறப்பு விருதுகளுக்கு அரசால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களை முதல்வர் வழங்குகிறார். முதல் வரின் சுதந்திர தின உரையில், மது விற்பனை குறைப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகள் வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர தின விழாவுக்காக தலைமைச் செயலக கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பம் புதுப்பிக்கப் பட்டுள்ளது. கோட்டை எதிரில் உள்ள பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த 6-ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று காலையும் ஒத்திகை நடத்தப் பட்டது. விழாவையொட்டி, கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள், மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், துறைமுகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in