Published : 07 Dec 2019 07:53 AM
Last Updated : 07 Dec 2019 07:53 AM

மக்கள் நலனுக்கு எதிரானது; ரயில்வே தனியார்மயத்தை அரசு கைவிட வேண்டும்: எஸ்ஆர்எம்யூ கண்ணையா வலியுறுத்தல்

ரயில்வேயை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை தொழிலாளர்கள், பொதுமக்கள் நலனுக்கு விரோதமானது. எனவே தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் கடந்த 3 நாட்களாக நடந்துவந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நேற்று நிறைவடைந்தது. ஏஐஆர்எஃப் பொதுச் செயலாளர் எஸ்.ஜி.மிஸ்ரா, ரயில்வே வாரிய உறுப்பினர் அகர்வால் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அலுவலர்கள், ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா கூறியதாவது:மத்திய அரசு 2 ரயில்களை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசியிடம் ஒப்படைத்துள்ளது. அடுத்ததாக, பல்வேறு முக்கிய வழித்தடங்களில் 100 ரயில்களை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வேயை தனியார்மய மாக்கும் மத்திய அரசின் கொள்கை தொழிலாளர், பொதுமக்கள் நலனுக்கு விரோதமானது. தனியார் ரயில்கள் இயக்குவது அதிகரித்தால், பயணக் கட்டணம் பல மடங்கு உயரும். இதனால், சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

ரயில்வேயில் ஐசிஎஃப் போன்றவை அரசு நிறுவனங்களாக இருப்பதால்தான் குறைந்த செலவில் ரயில் பெட்டிகள் தயாரிக்க முடிகிறது. எனவே தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பயணிகள் கட்டண சலுகை, சரக்கு கட்டண சலுகைக்காக ரயில்வே ரூ.45 ஆயிரம் கோடி வரை செலவிட்டு வருகிறது. இந்த தொகையை மத்திய அரசு மானியமாக ரயில்வேக்கு வழங்க வேண்டும். ரயில்வே ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ரயில்வே ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்குவது மற்றும் தொழிலாளர் நல சட்டங்களில் மாற்றம் செய்வதால், இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு பறிபோகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x