Published : 06 Dec 2019 10:52 AM
Last Updated : 06 Dec 2019 10:52 AM

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணியால் வாகன ஓட்டிகளின் தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபத்து

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி நடைபெறும் இடத்துக்கு கீழ் குறுகலான சாலையில் இருசக் கர வாகனங்கள் செல்வதால் விபத்துஏற்படும் அபாயம் உள்ளது.

உக்கடம்-ஆத்துப்பாலம் இடையேயான மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், வாகன ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கடந்த மே 27-ம் தேதி முதல் கனரக, இலகு ரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டு வருகின்றன. தூண்களுக்கு மேல் நீளமான ‘ரெடிமேடு' கர்டரை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

குளக்கரைக்கும், மேம்பாலப் பணி நடைபெறும் இடத்துக்கும் இடைப்பட்ட மிகக்குறு கலான சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாக னங்கள் ஆத்துப்பாலம் நோக்கிச் செல்கின்றன. அவ்வப்போது மழைபெய்து வருவதால், அந்த பாதையில் குழிகள் ஏற்பட்டுள்ளன. மழைக் காலத்தில் தேங்கும் நீர் வெளியேற வழியில்லாததாலும், மேம்பாலப் பணிக்காக பயன்படுத் தப்படும் நீராலும் இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதை, எப்போதும் சேறும், சகதியுமாக உள்ளது. குழிகளில் ஏறி இறங்கும் போது பலர் தடுமாறி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. வாகன ஓட்டிகளின் தலைக்கு மேல் மேம்பாலப் பணி நடைபெறுவதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, ஏதேனும் விபத்து நடைபெறும் முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது மாற்றுப்பாதையை சீர்செய்ய வேண்டும்என பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர். இது தொடர்பாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: ஒருபுறம் குளக்கரையும், மறுபுறம் மேம்பால பணியும் நடைபெறுவதால், இருசக்கர வாகனங் கள் செல்லும் இடத்தில் தேங்கும் மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால், மாநகராட்சி உதவியுடன் தண்ணீரை வெளியேற்றினோம். மேம்பாலப் பணி நிறைவடைந்த பிறகு, பாலத்தின் அடியில் இருபுறமும் தண்ணீர் வெளியேற வழிவகை செய்யப்படும்.

தற்போது தண்ணீர் வெளியேற்றும் வழியை அமைத்தால் மேலும் நெருக்கடி ஏற்படும். இன்னும் 4 தூண்களை இணைக்கும் பணி நிறைவடைந்தால் இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையின் அகலம் கூடிவிடும். வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேம்பால பணி நடைபெறும் இடத்துக்கு கீழ் தற்போது குண்டும், குழியுமான சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், மேம்பாலப் பணி நடக்கும்போது முடிந்தவரை வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்து வது நல்லது.

பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்கள் செல்வதை தடை செய்து, மாற்றுதிட்டத்தை செயல் படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு காவல்துறையிடமும் தெரிவித்துள் ளோம்.

சுங்கம் - உக்கடம் மேம்பாலத்தின் இறங்குபாதையை ஒட்டி செல்லும் கழிவுநீர்பண்ணை சாலையில் சென்றால் கரும்புக்கடை சாலையை (பழைய சுங்கச்சாவடி அருகே) அடையலாம். இச்சாலையிலுள்ள குழிகளை செப்பனிட்டு சீரமைத்தால், இருசக்கர வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும் என்பதால் அந்த சாலையை சீரமைத்துதர வேண்டும் என மாநகராட்சியிடம் கடந்த அக்டோபர் மாதமே தெரிவித்தோம். ஆனால், மாற்றுப்பாதையில் உள்ள வழித்தடத்தில் வசிக்கும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x