Published : 03 Dec 2019 21:09 pm

Updated : 03 Dec 2019 21:12 pm

 

Published : 03 Dec 2019 09:09 PM
Last Updated : 03 Dec 2019 09:12 PM

மேட்டுப்பாளையம் விபத்து: சோகத்தின் இடையே தனது பிள்ளைகளின் கண்களைத் தானம் செய்த தொழிலாளி

mettupalayam-accident-a-worker-who-donated-her-children-s-eyes-amid-the-tragedy

மேட்டுப்பாளையம் விபத்தில் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த கல்லூரி சென்ற மகளும், பள்ளியில் பயின்ற மகனும் உயிரிழந்த சோகத்திலும் அவர்களின் கண்களைத் தானமாக வழங்கியுள்ளார் டீக்கடை தொழிலாளி ஒருவர்.

தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலையில் மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனியில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தமிழகத்தைப் பரபரப்பில் ஆழ்த்திய இந்த விபத்தைப் பலரும் கண்டித்து சுவர் கட்டிய உரிமையாளரைக் கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கருங்கல் சுவர் கட்டி விபத்துக்குக் காரணமாக இருந்த ஜவுளிக் கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு சோகங்களை மக்கள் நெஞ்சில் எழுப்பிய இந்த விபத்தில் தனது மகன், மகளை ஒருசேரப் பறிகொடுத்த தொழிலாளியின் செயல் அனைவராலும் நெகிழ்ச்சியுடன் பாராட்டப்படுகிறது.

முதல்வர் முன் நிற்கும் செல்வராஜ்

மேட்டுப்பாளையம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சற்று தொலைவில் செல்வராஜின் வீடு உள்ளது. அவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் மகள் நிவேதா, மகன் ராமநாதனை அவர்களின் சித்தி சிவகாமி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று சித்தி சிவகாமியின் வீட்டில் நிவேதாவும், ராமநாதனும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

டீக்கடையில் வேலை செய்யும் தொழிலாளியான செல்வராஜ் விபத்து நடந்த அன்று டீக்கடையிலேயே தங்கிவிட்டார். சுவர் இடிந்து மகளும், மகனும் உயிரிழந்ததை அறிந்து இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்.

இருவர் மீதும் அதீத பாசம் கொண்ட செல்வராஜ் தனது நிலை பிள்ளைகளுக்கு வரக்கூடாது, அவர்கள் படித்து நல்ல நிலையை அடையவேண்டும் என்பதற்காக தனது வறுமையான சூழலிலும் கஷ்டப்பட்டு மகனையும் மகளையும் படிக்க வைத்தார். அவரது எண்ணப்படி மகனும், மகளும் சிறப்பாகப் படித்து வந்தனர். இந்நிலையில் தான் சுவர் இடிந்து அவரது குடும்பத்தில் பேரிடியாக விழுந்தது.

தனது எதிர்காலமாக நினைத்து வளர்த்து வந்த பிள்ளைகளை இழந்து நின்ற நிலையிலும், அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதை நினைத்து வருந்திய செல்வராஜ், அந்த சோகத்தினூடே ஒரு நல்ல காரியத்தைச் செய்தார்.

அது தனது மகன், மகளுடைய கண்களைத் தானமாக தருவது என்ற முடிவு. மருத்துவமனையில் உயிரிழந்தவர் கண்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்றால் 6 மணிநேரத்திற்குள் கண்களை எடுத்தால் மட்டுமே பயன்படும். அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த பிள்ளைகள் உடலை மீட்கவே 2 மணிநேரம் கடந்த நிலையில், உடனடியாக கண் தானம் செய்ய அவர் எடுத்த முடிவு அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தனது மகன், மகள் ஆகிய இருவரின் 4 கண்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செல்வராஜ் தானமாக வழங்கினார்.

மகன், மகளைப் பறிகொடுத்த துக்கத்திலும் தனது பிள்ளைகள் கண்கள் மூலம் எங்கோ வாழ்வார்கள் என முடிவெடுத்து தானம் செய்த டீக்கடைத் தொழிலாளியின் எண்ணம் போற்றத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Mettupalayam accidentA workerWho donated her children's eyesAmid the tragedyமேட்டுப்பாளையம் விபத்துசோகத்தின் இடையேதனது பிள்ளைகளின் கண்களை தானம் செய்த தொழிலாளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author