மதுரை ஆட்சியரின் வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு சென்னைக்கு மாற்றம்

மதுரை ஆட்சியரின் வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு சென்னைக்கு மாற்றம்

Published on

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக மாவட்ட ஆட்சியர் மதுரை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள தனிநபர் வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக மு.க.அழகிரி மீது அப்போதைய மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2014-ல் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

இதே விவகாரம் தொடர்பாக எஸ்.ஜெகநாதன் என்பவர் 25.5.2013-ல் திருவாரூர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப்புகாரின் பேரில் ஆட்சியரின் உத்தரவின் பேரி்ல் விசாரணை நடத்தப்பட்டு 29.10.2013-ல் தேர்தல் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே விவகாரம் தொடர்பாக 2014-ல் தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவி்ல் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. தேர்தல் வழக்காக இருப்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in