Published : 03 Dec 2019 11:40 AM
Last Updated : 03 Dec 2019 11:40 AM

சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் : வழக்கையும் போட்டுவிட்டு தாமதப்படுத்துவதா?- மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் வழக்கைத் தொடுத்த மத்திய அரசே ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சேலம் – சென்னை இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக சுரேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதன்பிறகு, தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதேபோல, வனத்துறை பகுதிகளிலும் குறுக்கிடும் இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசும் வழக்கு விசாரணையின் போது உத்தரவாதம் அளித்து இருந்தது.

வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலைகளை அமைத்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என நீதிபதிகளும் கருத்து தெரிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தீர்ப்பளித்தனர். 8 வழிச்சாலைக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன்மூலம் 8 வழிச்சாலை திட்டத்தை உயர் நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்தது.

சேலம் - சென்னை 8 வழித் திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதன் திட்ட மேலாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கில் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும், திட்டம் தொடர்பான விளக்க அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஆஜரான மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர் , “கூடுதல் ஆவணம் மற்றும் திட்டம் தொடர்பான விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். அதேபோல இந்த வழக்கு தொடர்பாக புதிய ஒரு மனுவும் தாக்கல் செய்யவுள்ளோம், எனவே, வழக்கை ஒத்திவைக்க வேண்டும்”. என கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே மனு நிலுவையில் இருக்கும்போது, எதற்கு புதிய மனு ? ஒருவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் பிறர் வழக்கு தொடர்பான, மெரிட்டில் வாதிடுங்கள் என கூறினர்.

மனுதாரர்கள் தரப்பில் இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதை வைத்தே, தங்களின் வாதம் தொடரும் என கூறினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத்திய அரசுத்தரப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்தனர், “மத்திய அரசு தரப்பில் வாதம் செய்ய வேண்டும் என்று கூறி இன்று தேதி வாங்கப்பட்டது, ஆனால் தற்போது மத்திய அரசுத்தரப்பே அவகாசம் கோருகிறீர்கள். திட்டத்தை செயல்படுத்த காலதாமதம் ஆகிறது எனக்கூறி , நீங்கள் தான் முறையிட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தீர்கள்.

தேதியும் வாங்கிவிட்டு தற்போது மீண்டும் ஒத்திவைக்க கோரிவது ஏற்புடையதா ? பதில் மனு தாக்கல் செய்யவில்லை, திட்டம் தொடர்பான விளக்க அறிக்கையும் சரியான சார்ட் வடிவத்தில் தாக்கல் செய்யவில்லை,

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தோம். மூன்று மாதங்களாகியும் இதுவரை தாக்கல் செய்யாத மத்திய அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது”. என நீதிபதிகள் கடிந்து கொண்டதோடு வருத்தமும் தெரிவித்தனர்...

இதையடுத்து வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு 05/12 அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x