Published : 02 Dec 2019 12:39 PM
Last Updated : 02 Dec 2019 12:39 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: ஒரேநாளில் 11 வீடுகள் சேதம், தண்டவாளங்கள் மூழ்கின - இயல்பு வாழ்க்கை முடங்கியது, ரயில் சேவை பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த கனமழையால் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 11 வீடுகள் சேதமடைந்தன. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை, நேற்று காலை 8 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் சுந்தரவேல்புரம், கோக்கூர், தபால் தந்தி காலனி, சிதம்பரநகர், மாசிலாமணிபுரம், போல்டன்புரம், அம்பேத்கர் நகர், அண்ணாநகர், டூவிபுரம், ராஜீவ் நகர், ராஜகோபால் நகர், முத்தம்மாள்காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, எம்ஜிஆர் நகர், கோயில்பிள்ளை விளை, திரேஸ்புரம், சத்யாநகர் உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான பகுதி களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

வெற்றிவேல்நகர், செயின்ட் மேரீஸ் காலனி உள்ளிட்ட பகுதி களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. லூர்தம்மாள்புரத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப் பட்ட 300 பேர் சாமுவேல்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே வரமுடியாமல் மக்கள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாலை மறியல்

லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கோயில் பிள்ளைவிளை, சுடலை காலனி ஆகியவற்றில் வசிக்கும் மக்கள் மழைநீரை வெளியேற்றக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் சென்னையிலிருந்து நேற்று காலை தூத்துக்குடி வந்த முத்துநகர் ரயில், கோவை- தூத்துக்குடி ரயில், ஓகா- தூத்துக்குடி ரயில் ஆகியவை மேலூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய குருவாயூர் இணைப்பு ரயில், திருச்செந்தூர் பயணிகள் ரயில் ஆகியவை ஒரே ரயிலாக இணைக்கப்பட்டு காலை 10.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி பேருந்து நிலையத் திலும் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்தனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போல்டன்புரம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தாமிரபரணியில் வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 28,500 கன அடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி கடலுக்கு பாய்ந்தது.

தாமிரபரணி ஆற்றிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 பிரதான கால்வாய்களிலும் முழு அளவில் தண்ணீர் செல்வதால் தாமிரபரணி பாசன குளங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் பகுதியில் உள்ள கருமேனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணிநகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் சேதமடைந்தது. இதனால் சாத்தான்குளம்- உடன் குடி சாலையில் போக்குவரத்து படுக்கப்பத்து வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

முகாமில் தஞ்சம்

சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமத்தில் மழையால் வீடு சேதமடைந்ததை தொடர்ந்து அங்கு வசித்த 5 பேர் அருகேயுள்ள அரசு இ-சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அச்சம்பாடு அருகேயுள்ள எழுவரைமுக்கி கிராமத்தில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் 20 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் அச்சம்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி போலீஸ் நிலையம் அருகே சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த மருத மரம் முறிந்து விழுந்தது.


தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

11 வீடுகள் சேதம்

மழைக்கு ஒரே நாளில் 11 வீடுகள் சேதமடைந்தன. இதில் 9 வீடுகள் பகுதியளவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை 349 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 637 குளங்களில் இதுவரை 103 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 122 குளங்களில் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 181 குளங்களில் 51 முதல் 75 சதவீதம் வரையும், 173 குளங்களில் 25 முதல் 50 சதவீதமும், 58 குளங்களில் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி

தொடர் மழையால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாருகால் ஓடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பால் மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து பாய்கிறது. கோவில்பட்டி அருகே அய்யனேரி கிழக்கு காலனித் தெரு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. தகவலறிந்தவுடன் வட்டாட்சியர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர்கள் மூலம் ஓடைகளில் உள்ள அடைப்புகளை அகற்ற வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

மேலும், ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியும், வாருகாலை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன்பேட்டைத் தெரு, பிரதான சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நகராட்சி ஆணையர் ராஜாராம் உத்தரவிட்டார். சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில்,சுகாதார ஆய்வாளர்கள் அனைத்துத் தெருக்களிலும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்கள் மூலம் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை தங்குதடையின்றி ஓடைகளில் செல்ல ஏற்பாடு செய்தனர்.

சாத்தான்குளத்தில் அதிக மழை

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 186 மி.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் 163.8 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 144 மி.மீ., திருச்செந்தூரில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

காயல்பட்டினம் 83, விளாத்திகுளம் 39, காடல்குடி 18, வைப்பாறு 63, சூரன்குடி 13, கோவில்பட்டி 23.5,
கழுகுமலை 26, கயத்தாறு 49, கடம்பூர் 41, ஓட்டப்பிடாரம் 54, மணியாச்சி 32, வேடநத்தம் 10, கீழஅரசடி 59, எட்டயபுரம் 18, ஸ்ரீவைகுண்டம் 79.6. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,201.90 மி.மீ. மழை கொட்டியது. சராசரியாக 63.26 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச. 2) மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x