Published : 02 Dec 2019 11:37 AM
Last Updated : 02 Dec 2019 11:37 AM

நெல்லையில் கனமழையால் வீடு இடிந்து ஒருவர் உயிரிழப்பு: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; சாலை மறியல் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு  

கனமழைக்கு வீடு இடிந்து திருநெல்வேலி அருகே ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள குசவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(81). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி கந்தசாமி உயிரிழந்தார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. திருநெல்வேலி நகரில் மட்டும் 10 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

இதேபோல் தூத்துக்குடி மாநகர் முழுவதும் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. வெற்றிவேல் நகர், செயின்ட் மேரீஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். மழை நீரை வெளியேற்ற கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டவாளங்கள் மூழ்கின

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. சாத்தான்குளம் பகுதியில் உள்ள கருமேனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணி நகர் பாலம் சேதமடைந்தது.

சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், அச்சம்பாடு அருகேயுள்ள எழுவரை முக்கி கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு ஒரே நாளில் 11 வீடுகள் சேதமடைந்தன.நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 186 மி.மீ. மழை பெய்துள்ளது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி சுனாமி குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வெளியேற்றப்பட்டனர். திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மண்டபத்தில் சூறாவளி

ராமநாதபுரம் மாவட்டக் கடல் பகுதிகளில் தொடர் மழை, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை இடி, மின்னலுடன் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் இன்று (நவ.2) வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், தேவிபட்டினம், தொண்டி, எஸ்.பி. பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாகக் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மண்டபம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் பல படகுகள் சேதமடைந்தன. சுமார் 10 படகுகள் தரைதட்டி நின்றன. சேதமடைந்த படகுகளைச் சீரமைக்க தலா ரூ.1 லட்சம் வரை செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். படம்: என். ராஜேஷ்

டெல்டாவில் பயிர்கள் பாதிப்பு

டெல்டாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, அம்மாபேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்களும், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், குடவாசல், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்களும், நாகை மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்களும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.

மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை நேற்று பிற்பகல் வரைகொட்டியது.

நகரின் பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது. மரப்பாலம் சந்திப்பு, இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜிவ் காந்தி சிலை சதுக்கம், இசிஆர் சாலை, முருங்கப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை.

கடலூரில் விடிய விடிய மழை

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீரில் மூழ்கின. நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் உள்ள மழைநீர் பம்பிங் செய்யப்பட்டு பரவனாற்றில் விடப்படுகிறது. தொடர் மழையால் என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் இருப்பதால் மின்சார உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான வீராணம் ஏரியில் 47 அடியும், வாலாஜா 5.5 அடியும், பெருமாள் ஏரி 6 அடியும், வெலிங்டன் ஏரி 8.3 அடியும் நீர் நிரம்பியுள்ளன. இதில் வெலிங்
டன் ஏரியில் 26 அடிக்கு 8 அடிமட்டுமே நீர் நிரம்பியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் வழியே பாயும் ஆறுகள் மூலம் கொள்ளிடம் வடிநிலக் கோட்டத்தில் உள்ள 18 நீர் நிலைகளும் அதன் முழுக் கொள்ளளவான 2,292.16 மில்லியன் கனஅடியில் 2103.81 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. வெள்ளாறு வடிநிலக் கோட்டத்தின் மூலம் பயன்பெறும் 210 நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளாறு வடி நிலக் கோட்டத்தின் மூலம் மழைநீர் தேங்கும் 212 நீர் நிலைகளில், 7 முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x