Published : 01 Dec 2019 09:23 AM
Last Updated : 01 Dec 2019 09:23 AM

தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு அரசு திறன் பயிற்சி: தொழில் வளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

தொழில் நிறுவனங்களின் குறிப் பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தொழில் வளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக தொழில் துறை சார்பில் ‘தொழில் வளர் தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாடு, முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் முன்னிலையில் ரூ.2 ஆயிரத்து 55 கோடியே 43 லட்சம் முதலீட்டில் 11 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ள 3 அமெரிக்க நிறுவனங் களையும், ரூ.60 கோடி மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வெளியிட்டார்.

டிஆர்டிஓ மற்றும் சென்னை ஐஐடி-யுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழி திட்டத்துக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதல்வர் முன்னிலையில் கையெ ழுத்தாகின.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற் றும் லச்சினையை வெளியிட்ட முதல்வர், தொழில் நிறுவனங் களுக்கான குறைதீர்க்க உதவும் ‘தொழில் நண்பன்’ இணையதளத் தையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பழனி சாமி பேசியதாவது:

நாட்டிலேயே தொழிற்சாலை கள் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதில் தற்போது வரை 53 புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்கள் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை தொடங்கியுள்ளன. 219 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிலையில் உள்ளன.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற் கான முயற்சிகளை தமிழகம் தொடர்ந்து எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்த பிறகு, கடந்த 10 மாதங்களில் மட்டும் ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடு களில் இருந்து ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டில் 83,800 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகை யிலான 63 புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திறன்வாய்ந்த பணியாளர்கள் இருப்பதால்தான் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.

தொழில் நிறுவனங்களின் குறிப் பிட்ட தேவைகளுக்கு ஏற்ப, அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும். இதற்கான பாடத் திட்டத்தையும், பயிற்சி நிறுவனத்தையும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே தேர்வு செய்யலாம். அவ்வாறு பயிற்சி பெற்றவர்களிடம் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தேர்வு செய்யலாம்.

தமிழகத்தில் இருந்து ஏற்று மதியை அதிகரிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழிலாளர் நலத் துறை அமைச் சர் நிலோஃபர் கபீல், தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x