Published : 01 Dec 2019 08:11 AM
Last Updated : 01 Dec 2019 08:11 AM

தமிழகத்தை தேசிய நீரோட்டத்துடன் இணைக்க முயற்சி; பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தகவல்

திருவள்ளூர்

தமிழகத்தை தேசிய நீரோட்டத்துடன் இணைக்க மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் நட்டா கூறினார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 16 மாவட்டங்களில் சொந்தமாக அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று, கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி னார்.

இதையடுத்து அவர் விழாவில் பேசியதாவது:

மனிதகுலத்தின் தொன்மையான மொழி தமிழ். இந்த தமிழ் கலாச்சாரம் இல்லாமல் இந்தியக் கலாச்சாரம் முழுமை பெறாது. ஐநா சபையில் கனியன் பூங்குன் றன் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் வரியை எடுத்துக் காட்டி பிரதமர் மோடி பேசியதன் மூலம் தமிழ் மீது பாஜக எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பது தெரிய வரும். நாட்டில் உள்ள 130 அரசியல் கட்சிகளில் பாஜக மட்டும்தான் தொண்டர்களை அடிப்படையாகக் கொண்டது. பாஜகவில் சாதாரண தொண்டராக இருந்த மோடி இப்போது பிரதமராக இருப்பதும் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாத அமித் ஷா பாஜகவின் தேசிய தலைவராக இருப்பதுமே அதற்கு உதாரணம்.

பாஜகவில் கடந்த மார்ச் மாதம் வரை 1 கோடி பேர் உறுப்பினராக இருந்தனர். அதன்பிறகான புதிய உறுப்பினர் சேர்க்கையில் 6 கோடி பேர் புதிதாக இணைந்தனர். இதனால், பாஜகவில் இப்போது 16 கோடி பேர் உறுப்பினராக உள்ளனர். தமிழகத்தில் 25 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந் துள்ளனர்.

தமிழகத்துக்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை என பிரி வினை சக்திகள் பேசி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் 13-வது நிதி கமிஷனில் தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 14-வது நிதி கமிஷனில் ரூ.5.50 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உஜ்வாலா திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 98 சதவீதம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. அதில், 5 லட்சத்து 36 ஆயிரம் வீடுகள் தமிழகத்தில் கட்டப்பட உள்ளன.

தமிழகத்தை தேசிய நீரோட்டத் துடன் இணைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மக்க ளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த மு.க.ஸ்டா லின், மற்ற கட்சிகளின் வற்புறுத் தலால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இப்படி குழப் பத்தை ஏற்படுத்துபவர்கள் தமிழக மக்களுக்காக என்ன சாதிக்கப் போகிறார்கள்?

இவ்வாறு நட்டா கூறினார்.

விழாவில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜவில் இணைந்தார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா?

பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் மற்றும் மையக் குழு கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் தேசிய செயல் தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்துக் கேட்கப்பட்டது. அதில், சிலர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், சில நிர்வாகிகள் வேண்டாம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் தலைமையுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என நட்டா கூட்டத்தில் தெரிவித்ததாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x