Published : 22 Aug 2015 08:00 AM
Last Updated : 22 Aug 2015 08:00 AM

பூரண மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பது நியாயமா? - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி

பூரண மதுவிலக்கு பிரச்சினையில் முதலமைச்சர் மவுனம் காப்பது நியாயமா என எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியை தேமுதிக ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நேற்று தொடங்கியது. இதில் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:

பூரண மதுவிலக்கு கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் முதலமைச்சர் மவுனம் காப்பாது நியாயமா. மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய அரசாங்கமே தண்ணீரை பாட்டில் அடைத்து விற்பனை செய்வது சரியல்ல. வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியமைக்கும். அப்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அவர் பேசினார்.

முன்னதாக பேசிய பிரேமலதா, தண்ணீர் பிரச்சினையை தீர்ப்போம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பதற்காக கும்மிடிப்பூண்டியில் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திருவள்ளூர் மாவட்டத்தில்தான் அதிகளவு மணல் கொள்ளை நடக்கிறது.

கல்வி, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்த தர வேண்டிய அரசாங்கம் மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தேமுதிக கைப்பற்றும் என நம்பிக்கை உள்ளது என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் சி.எச்.சேகர் எம்எல்ஏ, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே கடும் மழை பெய்ததால் நிகழ்ச்சி விரைவில் முடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x