Last Updated : 06 May, 2014 08:30 AM

 

Published : 06 May 2014 08:30 AM
Last Updated : 06 May 2014 08:30 AM

மன்னார் வளைகுடா தீவுகளில் தீவிர கண்காணிப்பு

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளில் தங்கி, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவக் கூடும் என்ற எச்சரிக் கை மற்றும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி இலங்கையில் இருந்து வந்தது போன்ற சம்பவங்களால் தமிழகம் மற்றும் இலங்கை இடையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தீவுகளில் சோதனை

தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, வான் தீவு, முயல்தீவு ஆகிய தீவுகளில் தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா, ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது.

‘தி இந்து’நாளிதழிடம், தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது: தூத்துக்குடி - ராமேஸ்வரம் இடையே மன்னார் வளைகுடாவில் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இரவு நேரங்களில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் தீவுகளிலேயே தங்கி கண்காணிக்கின்றனர்.

ராமேசுவரம் முதல் கன்னியா குமரி வரையிலான பகுதிதான் முக்கியமான இடம். இப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பு காரணமாகவே கடந்த பிப்ரவரி மாதம் ராமேசுவரத்தில் 34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரின் ரோந்து காரணமாக தூத்துக்குடி பகுதியில் 2 மூட்டை கஞ்சாவை கடலில் போட்டுவிட்டு கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

விழிப்புணர்வு குழுக்கள்

தமிழகத்தில் 591 கடலோர கிராமங்கள் உள்ளன. இவற்றில் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் அந்நியர் நடமாட்டம் இருந்தால், இக்குழுவைச் சேர்ந்த வர்கள் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிப்பர்.

தமிழக கடல் பகுதி வழியாக எந்த தீவிரவாதியும் ஊடுருவ முடியாது. அந்த அளவுக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியே தீவிரவாதிகள் ஊடுருவினாலும் அவர்களை தடுத்து கைது செய்ய தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x