Published : 26 Nov 2019 04:51 PM
Last Updated : 26 Nov 2019 04:51 PM

திருப்பூர் ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு

திருப்பூரில் வார விடுமுறை நாட்களில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பின்னலாடை நகரமான திருப்பூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பெரும்பான்மையானோர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். திருப்பூரில் வாடகை குடியிருப்புகளில் தங்கி வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஷிப்ட் முறையிலும், பீஸ் ரேட் மற்றும் ஒப்பந்த முறையிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு வரை பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் ரொக்கமாக ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக வெள்ளிக்கிழமைகளிலேயே பின்னலாடை நிறுவன நிர்வாகிகள் வங்கிகளுக்கு சென்று தொழிலாளர்களின் சம்பளத்துக்கு தேவையான பணத்தை எடுத்துவைப்பது வழக்கம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அந்த முறை ஓரளவு மாறியிருக்கிறது.பெரும்பான்மையான நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கென வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, ஊதியத்தை அவர்களது கணக்குகளில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதில் பிரச்சினை என்னவெனில், சனிக்கிழமை மாலை அல்லது இரவு பணி முடித்து வரும்போது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட சம்பளத்தை மறுநாள் எடுக்க சென்றால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏடிஎம் மையங்களில் நிலவும் பணத் தட்டுப்பாடு பிரச்சினையாக உள்ளது என்கின்றனர், தொழிலாளர்கள்.

இது தொடர்பாக திருப்பூர் காந்தி நகரை சேர்ந்த ஏ.ஜீவானந்தம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘ஞாயிற்றுக்கிழமை மாலை (நவ.24) அவசரத் தேவைக்காக அனுப்பர்பாளையத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அங்கு பணம் இல்லை. அதே பகுதியில் மேலும் 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றும் பணம் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு 1 கி.மீ. தூரம் பயணித்து தண்ணீர்பந்தல் பகுதிக்கு சென்று தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டியிருந்தது. விடுமுறை நாட்களில் பொதுமக்களின் தேவைகளுக்கு எளிதாக பணம் கிடைக்க வங்கி நிர்வாகத்தினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார்.

என்ன காரணம்?

இது தொடர்பாக வங்கியாளர்கள் தரப்பில் கேட்டபோது, ‘திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்டேட் வங்கி, பொதுத் துறை வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 350-க்கும் மேற்பட்ட வங்கி தலைமையகங்கள், கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

650-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் உள்ளன. இவற்றில் வார இறுதி நாட்களில் தேவையான பணம் நிரப்பி வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வார சம்பளத்தை நம்பியே உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சீட்டு முதல் மளிகைக் கடை வரை அனைத்துக்கும் அவர்கள் பணம் எடுக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையானோர் அந்த குறிப்பிட்ட 24 மணி நேரத்தில் பணம் எடுப்பதால் தொழிலாளர்கள் நிறைந்த இடங்களில் இந்த தட்டுப்பாடு எழுகிறது’ என்றனர்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, ‘பெரும்பாலும் சனிக்கிழமைகளில் வங்கி செயல்பட்டால் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பிரச்சினை எழுவதில்லை. ஏனெனில் வேலை நாளாக உள்ள சனிக்கிழமையில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பி வைக்கப்படும். சனி விடுமுறையென்றால், இப்பிரச்சினை எழுகிறது. இதைத் தவிர்க்க மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படும்.

மேலும் திருப்பூரில் முன்பிருந்ததை விட தற்போது வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காசில்லா பணப் பரிவர்த்தனை பழக்கம் பொதுமக்களிடையே கணிசமாக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரித்தால் நல்லது’ என்றார்.

- பெ.ஸ்ரீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x