Published : 26 Nov 2019 04:48 PM
Last Updated : 26 Nov 2019 04:48 PM

பாதசாரிகள் நடக்க..விபத்துகளை தவிர்க்க... சாலைகளில் வர்ணம்

பெரியகடைவீதியின் மற்றொருபுறத்தில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை மற்றும் இருக்கை.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக கோவை உள்ளது. இங்குள்ள 100 வார்டுகளில், 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதிகரிக்கும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி நிர்வாகத்தினரும், ஜெர்மன் நாட்டின் ஜெர்மன் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனத்தினரும் இணைந்து, மாநகரில் மோட்டார் பயன்பாடு இல்லாத வாகனப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் சைக்கிள் பாதை, நடந்து செல்வதற்கான பாதை ஏற்படுத்த, ‘டேக்டிகல் அர்பனிசம்’ தலைப்பில் நூதனத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, முதல்கட்டமாக பெரியகடை வீதியில் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஜெர்மன் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனின், நகர்ப்புற மேம்பாட்டு நிபுணர் ரஞ்சித் பர்வதபுரம் கூறும்போது,‘‘பாதசாரிகள் பாதுகாப்பாக சாலைகளில் நடந்து செல்லவும், விபத்துகளை குறைக்கவும், வேகமாக வரும் வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தவும் ‘டேக்டிகல் அர்பனிசம்’ திட்டத்தின் கீழ் மாநகரில் உள்ள சாலைகளில் வர்ணம் பூசும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஜூலை மாதம் மாநகர் முழுவதும் சர்வே செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மாநகராட்சி, அரசுப் போக்குவரத்துக் கழகம், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் உள்ளிட்டோருடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் இறுதியில், மாநகரில் மொத்தம் 300 கிலோ மீட்டர் தூரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை, வடவள்ளி, துடியலூர், சாயிபாபா காலனி உள்ளிட்ட 26 இடங்களில், குறிப்பிட்ட மீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வர்ணம் பூசி அடையாளப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதலில், அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த பெரியகடை வீதி, ராஜ வீதி சாலைகளை இணைக்கும் வகையில், 800 மீட்டர் தூரத்துக்கு, சாலையின் இருபுறங்களிலும் காவி, ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன.


கோவை பெரியகடைவீதி கோனியம்மன் கோயில் அருகே, சாலையில் வரையப்பட்டுள்ள வர்ணம்.

இந்த சாலையில் நடைபாதை, சைக்கிள் பாதைக்கு தரையில் பல வடிவ வர்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முன்னரே உள்ள நடைபாதையில் வெயில் படாத வகையில் துணி மூலம் மேற்கூரை அமைத்தல், பேருந்துகள் நிறுத்தும் இடத்தை அடையாளப்படுத்தி தரையில் வர்ணம் பூசுதல், பாதசாரிகள் சாலையை கடக்க வர்ணம் பூசி அடையாளம் ஏற்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட டயர்களை வர்ணம் பூசி, அதன் மீது கயிறு கட்டி இருக்கை போல் ஏற்படுத்துதல், மரச் சாமான்களை கொண்டு இருக்கை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரங்கள் நடுதல் போன்ற பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன,’’ என்றார்.

மேலும்,’’ நாட்டில் பல்வேறு இடங்களில் முக்கிய சந்திப்புகளில் மட்டுமே இதுபோல் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், முதல்முறையாக கோவை மாநகரில் தான் குறிப்பிட்ட மீட்டர் தூரம் வரை, சாலைகளில் வர்ணம் பூசி அடையாளம் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு வர்ணம் பூசி அடையாளப்படுத்துவதன் மூலம் அந்த சாலைகளில் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்துவதோடு, விபத்துகளை குறைக்கவும் வழிவகுக்கும்.

பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலைகளில் நாங்கள் ஆய்வு நடத்திய போது, ஒரு மணி நேரத்துக்கு 4 ஆயிரம் பேர் நடந்து செல்கின்றனர், அதிகபட்சமாக பீக் ஹவர்ஸில் ஒரு மணி நேரத்துக்கு 6 ஆயிரம் பேர் நடந்து செல்கின்றனர் எனத் தெரியவந்தது. எனவே, தான் இங்கு முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெரியகடை வீதியில் இத்திட்டம் தொடங்கும் போதும், தொடங்கிய பின்னரும் ஆலோசனை கேட்கப்பட்டது. இத்திட்டம் முடிக்கப்பட்ட பின்னரும் மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும். அதை தொடர்ந்து அந்த கருத்துகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு செய்யப்படும்.

அதில் கூறப்படும் ஆலோசனையை அடுத்தடுத்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்வோம். மொத்தமுள்ள 300 கிலோ மீட்டர் தூரத்தில் வர்ணம் பூசப்படாத மற்ற இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடைகள் அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.கோவை பெரியகடைவீதி கோனியம்மன் கோயில் அருகே, சாலையில் வரையப்பட்டுள்ள வர்ணம். பெரியகடைவீதியின் மற்றொருபுறத்தில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை மற்றும் இருக்கை.

- டி.ஜி.ரகுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x