Published : 10 May 2014 08:35 AM
Last Updated : 10 May 2014 08:35 AM

சித்தாந்த ரீதியான தீர்ப்புகளை அளித்தவர் நீதிபதி சந்துரு: ‘இந்து’ குழும சேர்மன் என்.ராம் புகழாரம்

‘சட்டத்தின் எல்லைக்குள் நின்று கொண்டு பல சித்தாந்த ரீதியான தீர்ப்புகளை அளித்தவர் நீதிபதி கே.சந்துரு’ என்று ‘இந்து’ குழுமங்களின் சேர்மன் என்.ராம் புகழாரம் சூட்டினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலை ‘இந்து’ குழுமங்களின் சேர்மன் என்.ராம் வெளியிட பேராசிரியர் பா.கல்யாணி பெற்றுக்கொண்டார். விழாவில் என். ராம் பேசியதாவது:

1968-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வெண்மணி என்ற கிராமத்தில் 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் உயிரோடு கொளுத்தப்பட்ட நிகழ்வு குறித்து அன்றைக்கு இருந்த ஊடகங்கள் உண்மைச் செய்தியை வெளியிடவில்லை என்று நீதிபதி சந்துரு தனது நூலில் கூறியுள்ளார். உண்மைதான். அந்த நிகழ்வை அன்றைய ஊடகங்கள் மறைத்துவிட்டன. பின்னர் அந்தச் செய்திகள் மெல்ல மெல்ல வெளியே வரத் தொடங்கியபின் அந்த மக்களின் நீதிக்கான போராட்டங்களில் பங்கேற்றவர் கே.சந்துரு.

சாதாரண ஏழைகள் மற்றும் தலித்துகளின் பிரச்சினைகளுக்காக வழக்கறிஞராக நின்று போராடிய முற்போக்குவாதியான சந்துரு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அப்போது அவர் ஏற்கெனவே செய்த முற்போக்குப் பணியைத் தொடர முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால் தாழ்த்தப்பட்ட, ஏழை மக்களுக்கு சட்டத்தின் வரையறைக்குள் இருந்து நன்மைகளைச் செய்ய முடியும் என சந்துரு உறுதியாக நம்பினார். அந்த நேரத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், ‘இன்று நீதித்துறை என்பது தர்மத்தை இழந்து நிற்கிறது. இந்தச் சூழலில் ஆதிவாசிகள், தலித்துகள் போன்ற நம் நாட்டின் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் பெரும் பணியை நீங்கள் செய்திட வேண்டும்’ என்று கூறியிருந்தார். அந்த சவாலை ஏற்று, தனது சொந்த அனுபவங்களையும் அம்பேத்கர் போன்றவர்களின் சித்தாந்தங்களையும் ஒருங்கிணைத்து சட்டத்தின் எல்லைக்குள் நின்று கொண்டு ஏழை மக்களுக்காக ஏராளமான தீர்ப்புகளை அவர் வழங்கியிருக்கிறார்.

இந்த நூலைப் பதிப்பித்துள்ள ரவிக்குமார் தனது பதிப்புரையில், ‘சட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டுச் சொல்லப்படுபவை தீர்ப்புகள். அதேநேரத்தில் சட்டங்களை மட்டும் பார்க்காமல் நியாயங்களையும் நினைவில் கொண்டு வழங்கப்படும் தீர்ப்பு ‘நீதி’ என்ற மதிப்பைப் பெறுகிறது’ என்று கூறியுள்ளார். சந்துருவின் தீர்ப்புகள் அனைத்துமே இத்தகைய மதிப்புக்குரியவை. அத்தகைய சிறப்பான தீர்ப்புகள் தொடர்பாக அவர் தொகுத்து வழங்கியுள்ள இந்தப் புத்தகம் தமிழில் வந்துள்ளது. இது ஆங்கிலத்திலும் வெளிவர வேண்டும்.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். நூலை வெளியிட்ட மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ரவிக்குமார் அறிமுகவுரையாற்றினார். பத்திரிகையாளர் ஞாநி, பேராசிரியர் பா.கல்யாணி உள்ளிட்டோர் உரையாற்றினர். நிறைவாக நீதிபதி கே.சந்துரு ஏற்புரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x