Published : 25 Nov 2019 08:31 AM
Last Updated : 25 Nov 2019 08:31 AM

அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால், பார்சல் எண்ணிக்கை 29% அதிகரிப்பு: குறைவான கட்டணம், பெரிய நெட்வொர்க் என்பதால் நல்ல வரவேற்பு

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச அஞ்சல் நிலையத்தில், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகின்றன.

ப.முரளிதரன்

சென்னை

ஏற்றுமதி பொருட்களை அஞ்சல் துறை மூலம் அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இந்த சேவை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

அஞ்சல் துறை மூலம் தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கம் இல்லாத தபால்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், வெளியுறவு வர்த்தகக் கொள்கையில் மத்திய அரசு கடந்த 2018 ஜூன் மாதம் மாற்றம் செய்தது. அதன்படி, வெளிநாடுகளுக்கு வணிக நோக் கில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை அஞ்சல் துறை மூலமாக அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யும் பார்சல் சேவையை இந்திய அஞ்சல் துறை தொடங்கியது.

இதுகுறித்து சென்னையில் உள்ள அஞ்சல் துறையின் வெளிநாட்டு அஞ்சல் பிரிவு இயக்குநர் வி.சந்தானராமன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

இறக்குமதி - ஏற்றுமதி எண்

அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப, சம்பந்தப்பட்ட ஏற்றுமதி யாளரிடம் இறக்குமதி - ஏற்றுமதி எண் (ஐஇசி கோடு) இருக்க வேண்டும். அத் துடன், ஏற்றுமதிக்கான அஞ்சலக பில்லை யும் அவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான பார்சல்களை சர்வதேச அஞ்சல் நிலை யங்கள் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். இதற்காக, சென்னையில் 2 அஞ்சலகங்கள், புதுவையில் ஓர் அஞ்சலகம் உள்ளன.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப் பப்படும் சர்வதேச விரைவு அஞ்சல், பார்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2018 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 81,577 சர்வதேச விரைவு அஞ்சல்கள், பார்சல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இது இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 1.04 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 29 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

தினமும் 104 நாடுகளுக்கு சராசரியாக 350 முதல் 550 விரைவு தபால்கள், 300 முதல் 500 பார்சல்களும் அனுப்பப்பட்டு வரு கின்றன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மொத்த விரைவு தபால்களில் பாதி அள வுக்கு (50 சதவீதம்) அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. அதேபோல, வெளி நாடுகளுக்கு செல்லும் மொத்த பார்சல் களில் சுமார் 80 சதவீதம், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப் படுகின்றன.

இந்திய அஞ்சல் துறை மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பதால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. அத்துடன், நமது அஞ்சல் துறை நெட்வொர்க் மிகப் பெரியது என்பதால், வெளிநாடுகளுக்கு பார்சல்கள் எளிதாக சென்று சேருகின்றன.

தவிர, அஞ்சல் துறை மூலம் வெளி நாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும்போது சுங்கத் துறை அனுமதியும் எளிதாக பெற முடிகிறது. அதிக அளவு பார்சல் களை அனுப்பும் நிறுவனங்களின் இருப் பிடத்துக்கே சென்று அவற்றை சேகரித்து அனுப்பும் சேவையையும் அஞ்சல் துறை வழங்குகிறது.

கருத்தரங்குகள்

அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும் சேவை குறித்து ஏற்றுமதியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (பியோ) மற்றும் கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஏற்றுமதியாளர் சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து கருத்தரங்குகளை அஞ்சல் துறை நடத்தி வருகிறது.

இவ்வாறு அஞ்சல் துறையின் வெளி நாட்டு அஞ்சல் பிரிவு இயக்குநர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x