Published : 23 Nov 2019 03:20 PM
Last Updated : 23 Nov 2019 03:20 PM

உள்ளாட்சி அமைப்புகளுக்கு திமுக ஆட்சியில் மறைமுகத் தேர்தல் ஏன் கொண்டு வரப்பட்டது?- ஸ்டாலின் பதில் 

திமுக இருந்த உள்ளாட்சி அமைப்புகளில் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தி நிர்வாகத்தையே நிர்மூலமாக்கியது அதிமுக அரசு. அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, திமுக ஆட்சிக் காலத்தில் ‘மறைமுகத் தேர்தல்’ கொண்டு வரப்பட்டது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“முதல்வர் பழனிசாமி, அரசு விழாக்களைச் சிறிதும் நாணமின்றிப் பயன்படுத்துவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி புதிய மாவட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர், “பாஜக கூட்டணியில் சேர்ந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஒரே நேரத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்கு பெற்றிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் முதல்வர் பழனிசாமியும், அவரது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பதவியேற்றதிலிருந்தே அதிமுக, ‘பாஜகவாக’ கலர் பூசிக் கொண்டதை மறைக்க மிகவும் சிரமப்பட்டு புதிய கதை ஒன்றை விட்டிருக்கிறார்.

‘புதிய மருத்துவக் கல்லூரிகள்’ என்கிறார். என்ன பயன்?

ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுத் தொகுப்பில் 5,530 மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போனதே. இதுவரை முதல்வர் ஏன் அதுபற்றி வாய் திறக்கவில்லை? திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குள் வரவே முடியாமல் இருந்த நீட் தேர்வை, அதிமுக ஆட்சியில் முதல்வரால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?

‘உள்ளாட்சிக்கு மறைமுகத் தேர்தல்’ என்பதில் தன் அரசுக்கு ஏற்பட்ட ‘கொள்கை மாற்றம்’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டியிருக்கிறார் பழனிசாமி. திமுக ஆட்சியில் நிகழ்ந்ததும் கொள்கை மாற்றம்தான். ‘2001-ல் என்னுடைய சென்னை மாநகர மேயர் தேர்தல் வெற்றி’யில் தொடங்கி, தமிழகத்தில் எங்கெல்லாம் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தார்களோ அங்கெல்லாம் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தி உள்ளாட்சி நிர்வாகத்தையே அடியோடு நிர்மூலமாக்கியது அதிமுக அரசு.

அபத்தமான அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, திமுக ஆட்சிக் காலத்தில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘மறைமுகத் தேர்தல்’ கொண்டு வரப்பட்டது. அதற்கு அவையில் நான் சொன்ன காரணத்தைத் தனது பதிலில் சுட்டிக்காட்டி திமுகவின் கொள்கை மாற்றத்திற்கான நியாயத்தை தன்னையும் அறியாமல் விளக்கிய முதல்வருக்கு நன்றி.

எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் சீரழிக்கப்படும். அந்தச் சீரழிவிலிருந்து மீட்கத்தான் திமுக ஆட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் 2011-ம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை தொடரும் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளின் நிலை என்ன?

2016-ல் இருந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. நீங்கள் சொல்வது போல் நடப்பது அதிமுக ஆட்சிதானே. இந்த ஆட்சியில் ‘மேயர்களுக்கு நேரடித் தேர்தல்’ என்று முதலில் 2018-ல் சட்டம். பிறகு ‘நேரடித் தேர்தல்தான்’ என்று முதல்வரே பேட்டி. ஆனால் ஒரே வாரத்தில் ‘மறைமுகத் தேர்தல்’ என்று அவசரச் சட்டம். ஏன் இந்தக் குழப்பமும் குளறுபடியுமான கொள்கை மாற்றம்? உங்கள் ஆட்சியில், உங்களை உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட விடாமல் தடுத்தது யார்? இதுதான் திமுகவின் கேள்வி.

‘மறைமுகத் தேர்தல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கவில்லை’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். அமைச்சரவையிலும் விவாதிக்காமல் இந்த முடிவு என்றால், உள்ளாட்சி ஊழலை மறைக்க, மறைமுகத் தேர்தலா? ஆகவே தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதல்வர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல.

‘திடீர் அவசரச் சட்டம்’, ‘தேர்தல் ஆணையச் செயலாளர் மாற்றம்’, ‘வார்டு வரையறைகளில் குளறுபடி’, ‘பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வார்டு வரையறை செய்யாதது’ என்று அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் பழனிசாமி, திமுக மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும். திமுக மத்திய ஆட்சியில் இருந்தபோது ‘தமிழகத்திற்கு எந்தத் திட்டத்தைத் தந்தார்கள்’ என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் வந்த திட்டங்களை நான் சட்டப்பேரவையிலேயே பட்டியலிட்டுள்ளேன். மக்களைச் சந்திக்காத - மக்கள் நலனைக் காது கொடுத்துக் கேட்காத முதல்வர், சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக் கூட கவனிப்பது இல்லை என்பது இப்போதுதான் நாட்டு மக்களுக்குத் தெரிகிறது. ஆகவே, திமுகவின் திட்டங்களை அறிய முதலில் – சட்டப்பேரவை பதிவேடுகளை எடுத்துப் படியுங்கள். அல்லது தற்போதுள்ள ஒவ்வொரு துறைச் செயலாளரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் - ஏன் உலகத்திலேயே கூட ‘அடிமையாட்சி’ - ‘கொத்தடிமை ஆட்சி’ - ‘ஊழலாட்சி’ - ‘நிர்வாகத்திறமை இல்லாத ஆட்சி’ - ‘வெற்று அறிவிப்புகளை வெளியிடும் ஆட்சி’ என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு இந்த நூற்றாண்டில், முதல்வர் பழனிசாமியின் தலைமையில் உள்ள ‘இரட்டைத் தலைமையின்’ ‘இரட்டை நாக்கு’ ஆட்சிதான் என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்வார்கள்.

உங்கள் அறியாமைக்கும் இயலாமைக்கும் திமுக மீது பழிபோடும் போக்கைக் கைவிட்டு, வகிக்கின்ற பொறுப்புக்கேற்ப, பொய்களைத் தவிர்த்து, இனியேனும் உண்மையைப் பேசுங்கள். இதுதான் முதல்வருக்கு இப்போது நான் முன்வைக்கும் வேண்டுகோள்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x