Published : 22 Nov 2019 05:30 PM
Last Updated : 22 Nov 2019 05:30 PM

கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.22) புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"நகரப் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு மருத்துவ வசதிகள் வாய்ப்புகள் உள்ள போதிலும், மக்கள் பெருமளவில் தங்களது சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையைத்தான் நாடி வருகின்றனர். மேலும், அரசு மருத்துவமனைகளில், பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கக்கூடிய வகையில் அதிநவீன சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டும் வருகின்றது.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகரி ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பல்வேறு விதமான உயர் சிகிச்சைகள் மேற்கொள்ள நோயாளிகள் வருகின்றனர். சுமார் 400பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 145 உள்நோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், மருத்துவமனைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவக் கருவிகளின் தேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. கூடுதல் வசதிகளுக்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, தொற்றா நோய்கள் பிரிவு, சிறுநீரகப் பிரிவு, இருதய நோயாளிகள் பிரிவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பிடம் ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்து செல்லும் உறவினர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழு அளவில் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாவட்ட அளவிலான மருத்துவமனை ஆலோசனைக் குழு ஒவ்வொரு மாதமும் உரிய முறையில் கூடி நடவடிக்கை எடுத்திடும்.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளை நேரில் விசாரித்தபோது கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் முறையாக அளிக்கப்படுகின்றன. இருதய சிகிச்சை, சிறுநீரகம், விபத்து சிகிச்சைகள் மிகவும் நல்ல முறையில் பெற முடிகிறது''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x