Published : 20 Nov 2019 12:01 PM
Last Updated : 20 Nov 2019 12:01 PM

200 வண்ணத்துப்பூச்சிகளின் வசிப்பிடம் கல்லாறு!

இயற்கை சூழல் சரியாக உள்ளதா என்பதை பட்டாம்பூச்சிகளின் இருப்பைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். இயற்கை சமநிலையில் பாதிப்பு நிகழ்ந்தால் அங்கு பட்டாம்பூச்சிகள் இருக் காது. உணவுச் சங்கிலியில் முக்கிய அங்கம் வகிக்கும் பட்டாம்பூச்சிகளும், அதன் புழுக்களும் பறவைகள், சிலந்தி, ஓணான், தவளை ஆகியவற்றுக்கு உணவாகின்றன.

தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வண்டு கள், குளவிகள் இல்லையென்றால் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது. மகரந்தச் சேர்க்கை இல்லாமல் போனால் தாவரங்களின் உற்பத்தி இருக்காது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 324 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதில் மூன்றில் இரண்டு பங்கு பட்டாம்பூச்சி வகைகள் கோவை கல்லாறில் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு பட்டர்பிளை சொசைட்டி (டிஎன்பிஎஸ்) சார்பில் t2014 ஜூலை முதல் 2019 ஆகஸ்ட் வரையிலான 5 ஆண்டுகள், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி கல்லாறில் நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பு குறித்து விவரித்தார் டிஎன்பிஎஸ் அமைப்பைச் சேர்ந்த அப்பாவு பாவேந்தன். “கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள கல்லாறில், பருவமழைக் காலங்களில் மழைப்பொழிவு நன்றாக இருக்கும். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்காகவும், உணவுக்காகவும் ஏற்காடு, கொல்லிமலை, பச்சமலை ஆகிய கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பட்டாம் பூச்சிகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

300 கிலோ மீட்டர் பயணம்

இடம்பெயரும் ஒரு பட்டாம்பூச்சி 3 நாட்களில் சுமார் 200 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை பயணிக்கும். சூரிய ஒளி நன்றாக உள்ள நேரமான காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பெரும்பாலும் இடம்பெயர்வு நடைபெறுகிறது. இரவு நேரங்களில் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிடும். அவ்வாறு இடம்பெயர்ந்து கல்லாறு வரும் பட்டாம் பூச்சிகள் திரும்பிச் செல்லாது. அவற்றில் ‘ஃபுளூ டைகர்’, ‘டார்க் புளூ டைகர்’, ‘காமன் குரோ’, ‘டபுள் பேண்டட் குரோ’ ஆகிய பட்டாம்பூச்சி வகைகள் முக்கியமானவை. இவற்றின், அடுத்த தலைமுறை பட்டாம்பூச்சிகள், ஏப்ரல்-மே மாதங்களில் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு திரும்பிச் செல்லும்.

‘காமன் பேண்ட்ட பீகாக்’, ‘லெஸ்ஸர் ஆல்பட்ராஸ்’, ‘ரெட் ஸ்பாட் டியூக்’, ‘காமாண்டர்’, ‘வேக்ஸ் டார்ட்’, ‘யெல்லோ பிரீஸ்டட் பிளாட்’ போன்ற அரியவகை பட்டாம்பூச்சிகள் கல்லாறிலேயே உற்பத்தியாகி, அங்கேயே வாழ்பவை. கல்லாறு வனப்பகுதியில் குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே 200 பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிறபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல வகைகள் தென்படும்” என்றார்.

மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் கூறும்போது, “கல்லாறு வனப்பகுதியில் கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சிகள் விவரம் வனத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் வனத்துறையின் திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

ஆச்சரியமூட்டும் உண்மைகள்…

# ‘பிளைன்டைகர்’ பட்டாம்பூச்சி நச்சுத்தன்மைகொண்டது. அதை பறவைகள் சாப்பிடாது. ‘டெனாய்ட் எக்ஃபிளை (பெண்)’, ‘தமிழ் லேஸ்விங்’ ஆகிய பட்டாம்பூச்சிகள் நச்சுத்தன்மை அற்றவை. ஆனால், அவை ‘பிளைன்டைகர்’ போன்றே நிறம், உருவத்தில் ஒத்திருக்கும். இதேபோல, நச்சுத்தன்மைகொண்ட ‘காமன்ரோஸ்’, ‘கிரிம்சன் ரோஸ்’ பட்டாம்பூச்சிகளைப் போலவே, ‘காமன் மார்மன் (பெண்)’ நிறத்தில் ஒத்திருக்கும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இயற்கை அளித்த கொடை இது.

# ‘ஸ்கிப்பர்ஸ்’ குடும்ப வகையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள் அதிவேகமாக பறந்து செல்லக் கூடியவை. தனக்கு ஏதும் தொந்தரவு நேரப்போகிறது என்று தெரிந்தால், வில்லிருந்து புறப்படும் அம்பைப்போல அவை விரைவாக பறந்துவிடும்.

# சில வகை பட்டாம்பூச்சிகள் நாம் நெருங்கி செல்லும்போது தொடர்ந்து பறந்து சென்றுகொண்டே இருக்கும். பின்னர், நாம் நடந்து களைப்படைந்து வியர்வை வெளியானபிறகு, அதிலிருந்து கிடைக்கும் தாதுக்களை சுவைக்க நம்மிடமே வரும்.

# ‘சில்வர்லைன்ஸ்’ பட்டாம்பூச்சிகளின் வால்பகுதியும் தலைபோன்றே இருக்கும். உட்காரும்போது தலைகீழாக உட்கார்ந்துகொள்ளும். தலை என நினைத்து வால்பகுதியை பறவைகள் கொத்தி னால், வால்பகுதியில் உள்ள இறக்கையின் சிறுபகுதியை மட்டுமே இழந்து அவை உயிர்வாழும்.

# ‘கிளாட்-ஐ புஷ்பிரவுன்’ பட்டாம்பூச்சிகளின் இறகுகளில் பார்ப்பதற்கு மனிதர்களின் கண்கள் போன்ற பிரகாசமான புள்ளிகள் இருக்கும். எதிரிகளை குழப்பி தப்புவதற்காக இந்த அமைப்பு பயன்படுகிறது.

# பெண் பட்டாம்பூச்சிகள் ஒரேநேரத்தில் 100 முட்டைகள் வரை இடும்.

# மழைக்காலங்களில் தங்களை தற்காத்துக்கொள்ள இலைகளுக்கு அடியில் பட்டாம்பூச்சிகள் அமர்ந்துகொள்ளும். இலையையே குடைபோன்று பயன்படுத்திக்கொள்ளும்.

# சிலவகை பட்டாம்பூச்சிகள் முட்டையிலிருந்து புழுவாக மாறிய பிறகு, கூடுகட்டி ஓராண்டுவரை உள்ளுக்குள் இருந்துகொள்ளும். சரியான சீதோஷ்ணநிலை வந்தபிறகே அவை பட்டாம்பூச்சியாக மாறும்.

# பட்டாம்பூச்சிகளின் ஆயுட்காலம் 15 நாட்கள் முதல் சில மாதங்கள் வரை என வகைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

- க.சக்திவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x