Published : 19 Nov 2019 08:07 PM
Last Updated : 19 Nov 2019 08:07 PM

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல் செய்த ஆட்சேபனை: முழு விவரம் 

முரசொலி நில விவகாரம் குறித்து பாஜக மாநிலச் செயலாளர் அளித்த புகார் ஏற்கத்தகுந்தது அல்ல என்பன உட்பட பல்வேறு ஆட்சேபனைகளை திமுக ஆணையம் முன் அளித்தது.

அதுகுறித்த முழு விவரம்:

முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரும் - கழக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., இன்று மாலை, சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ‘தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின்’ துணைத் தலைவர் முன்பு ஆஜராகி, பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகார் குறித்து தனது ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாக அளித்தார்.

ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான ஆட்சேபனையின் தமிழாக்கம் :

“முரசொலி அறக்கட்டளையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை, முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குழுவின் அதிகாரம் பெற்று கீழே கையெழுத்திட்டுள்ள நான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். சீனிவாசனின் புகாரினை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிப்பதற்கு கீழ்கண்ட ஆட்சேபனைளைப் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

1. அரசியல் சட்டம் 338 ஆவது பிரிவின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC) அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 338(5)ன் கீழ் இந்த ஆணையத்தின் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:-

a) அரசியல் சட்டத்தின்படியோ, அல்லது நடைமுறையில் உள்ள பிற சட்டத்தின் கீழோ அல்லது அரசு ஆணையின்படியோ பட்டியலின சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் புலனாய்வு செய்வது, கண்காணிப்பது மற்றும் அந்த பாதுகாப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து மதிப்பீடு செய்தல்.

b) பட்டியலினத்தவருக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பறிக்கப்படுவது பற்றி வரும் குறிப்பிட்ட புகார்களை விசாரிப்பது.

c) பட்டியலினத்தவர்களின் சமூக- பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள் குறித்த திட்டமிடுதலில் பங்கேற்பதும், அறிவுரை வழங்குவதும்- மத்தியிலும், மாநிலங்களிலும் பட்டியலின சமுதாயத்தினர் வளர்ச்சி குறித்த மதிப்பீடு செய்தல்;

d) பட்டியலினத்தவருக்கான பாதுகாப்புகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து குடியரசு தலைவருக்கு வருடாந்தர அறிக்கை மட்டுமின்றி - ஆணையம் விரும்பும் நேரங்களிலும் அறிக்கை அளிப்பது.

e) பாதுகாப்புகளை முறையாக செயல்படுத்துவதற்கு மத்திய அல்லது மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பட்டியலினத்தவருக்கான பாதுகாப்பு, நல திட்டங்கள் மற்றும் சமூக பொருளாதார திட்டங்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை அந்த அறிக்கையில் வழங்குவது.

f) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கப்படும் விதிகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் குறிப்பிடும் பட்டியலினத்தவருக்கான பாதுகாப்பு, நலத்திட்டங்கள், சமூக- பொருளாதார வளர்ச்சிப் பணிகள் மற்றும் பட்டியலினத்தினரின் முன்னேற்றத்திற்கான பணிகள் குறித்த பொறுப்புக்களை நிறைவேற்றுவது.

2. ஆணையம் தனது செயல்பாடுகள் தொடர்பான விதிகளை முறைப்படுத்திக் கொள்ளும் அதிகாரம் அரசியல் சட்டப்பிரிவு 338(4)ன் கீழ் உள்ளது. அதன் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நடைமுறை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

3. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் ஆர்.சீனிவாசனிடமிருந்து ஆணையம் ஒரு புகாரைப் பெற்றிருப்பதாக தோன்றுகிறது. அதில் சில அற்பமான, அவதூறான, அடிப்படையற்ற, ஆதாரமற்ற - முழுவதும் அரசியல் நெடியடிக்கும் புகாரை கூறியிருக்கிறார். எந்த ஆவண ஆதாரங்களும் அந்த புகாருடன் அளிக்கப்படவில்லை. சீனிவாசன் மீது சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் அவதூறு வழக்குகள் பதிவு செய்வதற்கு முரசொலி அறக்கட்டளைக்கு உரிமை உள்ளது.

4. ஆனாலும் இப்படியொரு அடிப்படையற்ற, ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில், தற்போது முரசொலி அறக்கட்டளையின் மேலாண் இயக்குனருக்கு சம்மன் அனுப்பியுள்ள ஆணையம், 19.11.2019 அன்று மாலை 3.00 மணிக்கு சென்னை சாஸ்திரி பவனில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

5. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கீழ்கண்ட மூன்று காரணங்களின் அடிப்படையில் மேற்கண்ட புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அதிகார வரம்பு கிடையாது என்று சமர்ப்பிக்கப்படுகிறது.

A) புகாரில் நில உரிமை குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதால்- அது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

B) புகார்தாரர் அரசியல் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. ஆகவே இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட புகார்.

C) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வகுத்துள்ள நடைமுறை விதிகளின் படி எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் முறைப்படியானது அல்ல. ஆகவே புகாரை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள இயலாது.

A. புகாரை விசாரிக்க ஆணையத்தின் அதிகாரவரம்பு குறித்து:

6.முரசொலி அலுவலகம் “பஞ்சமி” நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் புகார். “ஆணையம் இந்த புகாரினை புலனாய்வு செய்து “பஞ்சமி நிலத்தை மீட்க” வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. “அந்த நிலத்திற்கு முரசொலி அறக்கட்டளை உரிமையாளர் இல்லையென்றும், முரசொலி அறக்கட்டளை வெளியேற கட்டளை பிறப்பிக்கும்படியும்” ஆணையத்திடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

7. நில உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகார வரம்பினை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அரசியல் சட்டம் ஒப்படைக்கவில்லை. உண்மையில் சொல்வதென்றால், புகார் தாரர் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால் கூட, இப்பிரச்சினையில் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குத்தான் இருக்கிறது.

8. “தீர்ப்பளிக்கும் அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு இல்லை- அதிலும் குறிப்பாக நில உரிமை பற்றி தீர்ப்பளிக்கும் எந்த அதிகாரமும் இல்லை” என்று நீதிமன்றங்கள் அவ்வப்போது பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளன.

8.1 “பேராசிரியர் ரமேஷ் சந்திரா vs டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பிறர்” (LPA NO. 280/2007) வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 4.5.2007 அன்று வழங்கிய தீர்ப்பில் “ கட்டுப்படுத்தும் கட்டளைகளை அல்லது உறுத்துக் கட்டளைகளை பிறப்பிக்கும் அளவிற்கு அரசியல் சட்டம் 338 ஆவது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒரு தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது” என்று தீர்ப்பளித்துள்ளது.

8.2 “டெல்லி மாநகராட்சி vs லால் சந்த் மற்றும் பிறர்” (204 (2013) DLT 118) வழக்கில், “முதல் எதிர்மனுதாரர் கொடுத்த புகாரில் உள்ள நிலம் தொடர்பான உரிமை பற்றி தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை ஆணையம் தனக்குத்தானே எடுத்துக் கொண்டு, “வரையறை குழுவை” அமைத்து, நிலத்தை முதலாம் எதிர்மனுதாரரிடம் ஒப்படைக்குமாறு டெல்லி மாநகராட்சிக்கு கட்டளை பிறப்பித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

பட்டியலினத்தவராக இருந்தால் அவர் அளிக்கும் எந்த புகாரையும் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பது, “பட்டியலினத்தவரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பறிபோவது குறித்து விசாரிக்கலாம்” என்ற ஆணைய வரம்பின் தேவைக்கு அதிகமானது- அப்படி தேவைக்கதிகமானதை அதிகர வரம்பு ஆணையத்திற்கு இருக்க வேண்டும் என்பது சட்டம் இயற்றியவர்களின் நோக்கமாக இருக்க முடியாது.

பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் கொடுக்கும் எந்த புகாரையும் விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இருக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கமாக இருந்திருந்தால் உட்பிரிவு (b) மொத்தமாகவே வேறு விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்” என்று தீர்ப்பளித்துள்ளது.

8.3 “ஆல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எஸ்.சி/எஸ்.டி அசோசியேஷன் vs யூனியன் ஆப் இந்தியா” (1996) 6 SCC 606 வழக்கில் உச்சநீதிமன்றம், “அரசியல் சட்டப் பிரிவு 338-ன் உட்பிரிவு (8)ல் , “ஆணையத்திற்கு……..வழக்கை விசாரிக்கும் சிவில் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களும் உண்டு” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் “சிவில் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களும்” என்ற வார்த்தையை உட்பிரிவு 5-ல் உள்ள (a) அல்லது (b) ஆகியவற்றில் உள்ள புகார் குறித்து புலனாய்வு செய்யும் போதுதான் பயன்படுத்த வேண்டும்.

இந்த விஷயங்களை விசாரிக்க மட்டுமே சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தும் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அந்த வரையறுக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டுமே. தற்காலிக அல்லது நிரந்த உறுத்துக்கட்டளை வழங்கும் சிவில் நீதிமன்ற அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு இல்லை. அப்படியொரு அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 338-ன் கீழ் உள்ள உட்பிரிவு 8 அளிப்பதாகவும் அனுமானிக்க முடியாது” என்று தீர்ப்பளித்துள்ளது.

8.4 “யூனியன் ஆப் இந்தியா &நேஷனல் கமிஷன் & பிறர்” வழக்கில் 28.4.2014 அன்று டெல்லி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில்- குறிப்பாக “சிவில் பிரச்சினைகளில்” தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிகார வரம்பு குறித்துதான் டெல்லி உயர்நீதிமன்றமும் அதே மாதிரியான கருத்தை பிரதிபலித்திருக்கிறது. “ சொத்து தொடர்பான உரிமைகள் குறித்து தீர்ப்பளிக்கும் அதிகாரம்- புகாரைக் கொடுத்தவர் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் உட்பிரிவு (b)யின் கீழ் செய்யப்படும் விசாரணை வரம்பிற்குள் வராது.

ஒரு சொத்தின் மீது சட்டப்படியான உரிமையை யார் வேண்டுமானாலும் கோரலாம். அவர் பட்டியலினத்தவரோ அல்லது இல்லையோ எந்த ஒரு குடிமகனும் கோரலாம். ஆனால் சொத்தை ஒரு அரசோ அல்லது அரசின் அங்கமாக இருக்கும் நிறுவனங்களோ அபகரித்து விட்டது என்று வரும் புகார் நிச்சயமாக பட்டியலினத்தவரின் உரிமை மற்றும் பாதுகாப்பு பறிப்பு விவகாரத்திற்குள் வராது” என்று தீர்ப்பளித்தது.

9.இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள புகாரைப் பொறுத்தமட்டில் முரசொலி அலுவலகம் உள்ள நிலம், அதன் உரிமையாளர்களால் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரங்கள் மூலம் வாங்கப்பட்டு- அந்த நிலத்தின் மீது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 83 வருடங்களுக்கான சொத்துப் பத்திரங்கள் உள்ளன. இந்த டாக்குமென்டுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விசாரிக்கும் அதிகார வரம்பு சிவில் நீதிமன்றங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர- ஆணையத்திடம் இல்லை- அதுவும் “தலையிடும் உரிமை” இல்லாத ஒருவரின் புகாரின் அடிப்படையில்!

B. புகார் முறைப்படி இல்லை. ஆகவே புகார் விசாரணைக்கு ஏற்றது அல்ல:

10. பாரதிய ஜனதா கட்சியின் “Letter head”-ல் பேராசிரியர் (டாக்டர்) ஆர்.சீனிவாசன் என்பவர் புகார் செய்திருக்கிறார். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்தவர் அல்ல. இந்த ஆணையத்தை அணுக முடியாத எந்தவொரு பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரின் சார்பாக இந்த புகார் செய்திருப்பதாகவும் கூறவில்லை. இந்த புகார் ஒரு அரசியல் கட்சியினுடையது. தொடக்க நிலையிலேயே இந்த புகார் நிராகரிக்கப்பட வேண்டியது.

11. ஆணைய விதிகளின் அடிப்படையில் ஒரு புகாரில் கொடுக்கப்பட வேண்டிய தகவல்கள் இந்த புகாரில் ஏதும் இல்லை. விதி 7.4.1(d)-ன் படி “ இட ஒதுக்கீட்டுக் கொள்கை மீறப்பட்டுள்ளது குறித்த மத்திய அரசு ஆணை, அலுவலக உத்தரவுகள், மாநில அரசு ஆணைகள், பொதுத்துறை நிறுவனம் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் உத்தரவுகள் அல்லது இட ஒதுக்கீட்டை மீறிய வேறு ஆணைகள்” புகாரில் தெளிவாக விவரிக்கப்பட வேண்டும். இந்த புகாரில் எந்த விதி அல்லது ஆணை மீறப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடவில்லை. அதன் நகல்களும் இணைக்கப்படவில்லை. ஆகவே இந்த புகாரை அனுமதிக்கக்கூடாது.

12. அபகரிக்கப்பட்டதாக புகார் கூறப்படும் சொத்து குறித்த முகவரி, சர்வே எண் போன்ற எந்த தகவலும் இல்லாத தெளிவற்ற புகாராக இருக்கிறது. அடிப்படையற்ற ஒரு புகாரை வைத்துக் கொண்டு சுற்றி வளைத்து ஒரு விசாரணையை நடத்தக் கூடாது.

13. புகாரில் கோரப்பட்டுள்ள நிவாரணம் ஆணைய விதியில் வரையறுக்கப்பட்டுள்ள நிவாரணங்களில் வரவில்லை.

C. புகார் உள்நோக்கம் கொண்டது. தீய எண்ணம் உடையது. அரசியல் தன்மையுடையது.

14. காலம் காலமாக பொருளாதார மற்றும் சமூக அநீதியை சந்தித்து வரும் பட்டியலின சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாக்கும் புனிதமான பணிகளை ஆணையம் செயல்படுத்துகிறது. அந்த ஆணைய அலுவலகத்தையும், நடைமுறைகளையும் தங்களை அரசியல் களத்தில் பிரபலப்படுத்திக் கொள்ள நினைக்கும் நேர்மையற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

15. அண்மையில், மே 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை அடியோடு நிராகரித்து, திமுக மீது மக்கள் அபரிமித நம்பிக்கைய வைத்துள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

16. தோல்வியை ஜீரணிக்க முடியாத அந்தக் கட்சி, சேற்றை வாரி எறிதல் மற்றும் மத்திய ஆட்சியில் உள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற கொல்லைப்புறச் செயல்களில் ஈடுபடுகிறது. அரசியல் சட்ட அந்தஸ்து பெற்ற இந்த ஆணையம் தன் அலுவலகமும், நடைமுறைகளும் அரசியல் சண்டைக்கு பயன்பட அனுமதிக்காமல்- நேர்மையான பாரபட்சமற்ற முறையில் அரசியல் சட்டம் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு இந்த ஆணையம் செயல்பட வேண்டும்.

17. புகாரின் சாராம்சத்திலிருந்தே இது “அரசியல் சண்டை” என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. புகாரில், “சமூக நீதியின் காவலர்கள் என்று உரிமை கொண்டாடும் திமுக” என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, “அரசியல் உள்நோக்கம்” என்ற கரை படிந்துள்ள இந்த புகார், ஆணையத்தை பயன்படுத்தி திமுக மீது சேற்றை வாரி இறைக்கவும், அவதூறு பரப்புவதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

18.எப்படியிருந்தாலும் இந்த புகார் ஆதாரமற்றது எந்த அடிப்படை உண்மைகளும், சட்டரீதியான வேண்டுகோள்களும், புகாருக்கு தேவையான ஆதாரங்களும் இல்லாதது. இந்த காரணங்களின் அடிப்படையிலும் புகார் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

19.மேற்கண்ட விளக்கங்களுக்கு எந்த பங்கமும் வராத வகையில், சொத்தின் உரிமையாளர்கள் பொருத்தமான, சட்டப்படி தகுதி வாய்ந்த அதிகாரி முன்போ அல்லது நீதிமன்றத்தின் முன்போ அந்த நிலத்தின் எந்த ஒரு பகுதியும், எந்த காலகட்டத்திலும் பஞ்சமி நிலமாகவும் இல்லை அல்லது பஞ்சமி நிலமாக வகைப்படுத்தப்படவும் இல்லை என்பதை அந்த நீதிமன்றத்தின் முன்போ அல்லது அதிகாரி முன்போ- முறைப்படியும், சட்டப்படியும் புகார் ஏதேனும் கொடுக்கப்பட்டால், நிரூபிக்க தயாராக இருக்கிறார்கள் என்று சமர்ப்பிக்கப்படுகிறது.

மேற்கண்ட சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்த எங்களது ஆட்சேபனைகளை முதலில் விசாரித்து- அதன் விளைவாக 21.10.2019 தேதியிட்ட புகாரினை டிஸ்மிஸ் செய்து, அந்த புகாரை அளித்தவர் மீது கூடுதல் செலவு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் என்று ஆணையத்திற்கு பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்”
இவ்வாறு திமுக சார்பில் ஆட்சேபனை அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x