Published : 18 Nov 2019 12:38 PM
Last Updated : 18 Nov 2019 12:38 PM

தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி; அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம்

தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் வருகின்ற 21-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (நவ.18) வெளியிட்ட அறிவிப்பில், "தென் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை உள்ளிட்ட ஐந்து திட்டப் பணிகளுக்கு தடை விதிப்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையிலும், எதிர்க்கட்சி துணை தலைவரின் அறிக்கைக்கு கூட பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாத துறையின் அமைச்சர் ஜெயக்குமாரை விட்டு சட்ட தோல்விக்கும் வழக்கை அலட்சியமாக நடத்தியதற்கும் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விட வைத்திருப்பது அதிமுக அரசு ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினைகளில் விபரீத விளையாட்டை நடத்துவதையே தன் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்பது மேலும் நிரூபணம் ஆகிறது.

தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் வருகின்ற 21-ம் தேதி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x