Published : 06 Aug 2015 07:02 PM
Last Updated : 06 Aug 2015 07:02 PM

மதுவிலக்கு பிரச்சினையில் ஜெ. மவுனம் ஏன்?- ஸ்டாலின்

மதுக் கடைகளை மூடுவது தொடர்பாக தனது நிலையை முதல்வர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், ''தமிழக மக்கள் இதற்கு முன் கண்டிராத விசித்திரமான காட்சிகளை அதிமுக ஆட்சியில் அரங்கேறி இருக்கிறது.

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு முன்னால் மாநிலத்தின் மொத்த காவல்படையும் குவிக்கப்பட்டிருந்ததை நேரிலும் ஊடகங்களிலும் பார்த்த மக்கள் அரசின் செயலைப் பார்த்து அருவறுப்பு அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

குற்றங்களைக் கண்டறிவதிலும் தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் உலகின் புகழ்பெற்ற காவல்படைகளுக்கு நிகராகப் பேசப்பட்டுவந்த தமிழகக் காவல்துறைக்கு, இதைவிட அவமானத்தையும் தலைக்குனிவையும் வேறு யாராலும் தேடித்தந்திருக்க முடியாது.

காவல்துறையில் இன்னமும் எஞ்சியிருக்கிற நேர்மையான, கண்ணியமான அதிகாரிகளும் காவலர்களும் இதற்காகவா இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தோம் என வருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில், காவல்துறையின் மதிப்பு மக்கள் மன்றத்தில் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. மதுக்கடைகளை மூடுங்கள் என மக்கள் நலனுக்காகப் போராடுவோர் மீது மொத்த பலத்தையும் பிரயோகித்து விரட்டியடிப்பதும், மது குடிக்க வருவோருக்கு மதுக்கடை வாயில்களில் ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி, ராஜ மரியாதையுடன் பாதுகாப்புத் தருவதுமான விசித்திரம் அதிமுக ஆட்சியின் துக்ளக் தர்பாரின் உச்சம்.

மதுக் கடைகளை மூடக்கோரி அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையை கட்சிகளும் இயக்கங்களும் பிரதிபலிப்பதன் மூலம் சமூகப் பிரச்சினையில் தங்களின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காகப் போராடுவது போலவும், மக்கள் மதுவிலக்குக் கோரிக்கைக்கு ஆதரவாக இல்லை என்பது போலவும் அதிமுக ஆட்சி சிறுமைப்படுத்தி, திசைதிருப்பப் பார்க்கிறது.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் திமுகவும் ஏனைய கட்சிகளும் ஒரே குரலில் கோருகின்றன. ஆனால், அந்தக் கோரிக்கையைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மதுவால் ஏற்பட்ட பாதிப்பு என்ன, மதுவிலக்கை அமல்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி சிந்திக்காமல் காவல்துறையை ஏவி போராட்டத்தை ஒடுக்குவதில் ஆட்சியாளர்கள் செலுத்திவரும் ஈடுபாட்டைப் பார்த்தால், மக்கள் நலனில் இவர்களுக்கு துளியும் அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

மதுக் கடைகளை மூட முடியாது என்பதில் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருப்பதற்கு, தான் அறிமுகப்படுத்திய டாஸ்மாக்கை தானே அகற்றுவதா என்ற எண்ணம் காரணமாகவா? மதுபான ஆலைகள் மூலம் கிடைக்கும் ஆதாயம் காரணமா? அல்லது டாஸ்மாக் அருகே ஆ.யிரக்கணக்கில் பார் எனும் குடிப்பகங்களை நடத்திவரும் அதிமுகவினரின் வருவாய் பறிபோய்விடும் என்ற அச்சம் காரணமா என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.

மதுக் கடைகளை மூடுவது தொடர்பாக தனது நிலையை முதல்வர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும். திமுக சார்பில் எங்கள் நிலையைத் திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகும், உள்நோக்கத்தோடு எங்களை விமர்சிக்கும் ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும், இதில் ஆட்சியாளர்கள் மவுனம் காப்பது பற்றியும் அடக்குமுறையை ஏவுவது பற்றியும் கேள்வி எழுப்ப மறுப்பது புதிராக இருக்கிறது.

மக்கள் உணர்வுகளை மதிக்க மறுத்து, பிடிவாதப் போக்கைக் கைவிட ஆட்சியாளர்கள் முன்வராவிட்டால், அதற்கான கடும் விலையைத் தர நேரிடும்.

பொதுநன்மைக்காகப் போராடும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது எந்தவகையிலும் ஜனநாயகமாகாது. மக்கள் சக்தி எனும் மாபெரும் சக்தியைத் திரட்டி, செயல்படாத இந்த ஆட்சியை அகற்றி மதுவிலக்கு என்ற மக்களின் கோரிக்கையை திமுக நிறைவேற்றும் என்பது உறுதி'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x