Published : 17 Nov 2019 12:45 PM
Last Updated : 17 Nov 2019 12:45 PM

மேட்டுப்பாளையத்தில் டிக்கெட் வாங்கிய பின்னர் ரயிலில் ஏற ஒரு கிலோமீட்டர் நடைபயணம்: பரிதவிக்கும் பயணிகள் 

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று ‘மெமு' ரயிலில் ஏறும் பயணிகள்.

கோவை

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிய பின்னர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரயிலில் ஏற வேண்டியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.15, 10.40, மதியம் 1.00, மாலை 4.35 என நான்கு முறை கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நிற்கும் இந்த ரயிலின் இன்ஜினை, ஒவ்வொரு முறையும் மாற்றி அமைப்பதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் எரிபொருள் செலவை மீதப்படுத்த, இந்த ரயில் நவீன வசதிகளுடன் கூடிய ‘மெமு' ரயிலாக அண்மையில் மாற்றப்பட்டது.

தற்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள ‘1 ஏ' பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மெமு ரயில் நிற்கும் இடத்துக்கும், இதற்கான டிக்கெட் வாங்கும் கவுன்ட்டருக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இடைவெளி உள்ளது. இதனால், டிக்கெட் வாங்கிய பின்னர் ரயிலில் ஏறி பயணிக்க சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

முன்கூட்டியே வரும் பயணி கள், நிழற் கூரையில்லாத, ஒரு கிலோமீட்டர் தொலைவு பிளாட் பாரத்தில் வெயிலில் காத்திருக்கின் றனர். மழை பெய்தால் ஒதுங்கக்கூட இடமின்றி நனைகின்றனர். இந்த இடைப்பட்ட பகுதியில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் இல்லை.

தினமும் சென்னையில் இருந்து அதிகாலையில் வரும் நீலகிரி எக்ஸ் பிரஸ் ரயில், மாலை வரை முதல் நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால், பயணிகள் ரயிலை இதற்கடுத்த பிளாட்பாரத்தில் நிறுத்த வேண்டியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எளிதில் சென்றடையும் வகையில் பயணிகள் ரயிலை நிறுத்த, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மெமு ரயில் நிறுத்தப்படும் பிளாட்பாரத்தில் நிழற்கூரை, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x