Published : 10 Aug 2015 04:15 PM
Last Updated : 10 Aug 2015 04:15 PM

கள்ளழகருக்கு மரியாதை செலுத்த மது, புகையிலை விற்க தடை: பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் தேனூர் கிராம மக்கள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வரலாற்றுப் பெருமை வாய்ந்த தேனூரில் மது, புகையிலைப் பொருட்களை விற்பதில்லை என்ற கொள்கையை பலநூறு ஆண்டுகளாக அக்கிராமத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே வைகை கரையில் அமைந்துள்ளது தேனூர். இக்கிராமம் குறித்து, 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகளை தொல் லியல் அறிஞர்கள் கண்டறிந் துள்ளனர். இப்பகுதி பாண்டியர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

நாயக்க மன்னர்கள் காலத்திலிருந்துதான் பிரசித்தி பெற்ற கள்ளழகரின் சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெறுகிறது. அதற்கு முன் அழகர் மலையில் இருந்து பெருமாள் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வூரை ஒட்டி வைகை ஆற்றுப் படுகையில் பழங்கால நாணயங்கள், கல்வெட்டுகள், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த வாழ்விட மேடுகள், பிராமி எழுத்துகள் பொறித்த தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

கிரேக்க நூலாசிரியர் தலாமி, தமது நூலில் தேனூர் கிராமம் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இவ்வூரில் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழமையான சிவன் கோயில் உள்ளது.

இதுகுறித்து தேனூர் பஞ்சாயத்துத் தலைவர் லோகசுந்தரி கூறியது:

காலங்காலமாக எங்கள் ஊர் வைகை ஆற்றில்தான் கள்ளழகர் இறங்கி அருள்பாலித்துள்ளார். இதனால், திருமாலிருஞ்சோலை அழகருக்கும், தேனூருக்கும் நேரடி தொடர்புள்ளது. தேனூரை மக்கள் அழகரின் பூமியாகவே கருதுகின்றனர். தங்கள் முதல் விளைச்சலில் முதல் பங்கை அழகர்கோவிலுக்கு இன்றும் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். சித்திரைத் திருவிழா கொடியேற்றும்போது வண்டியூர் அருகே வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திலும் கொடி ஏற்றப்படும். மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபம் தீர்க்கும்போது, தேனூர் மக்களுக்கே முக்கியத் துவம் அளிக்கப்படும். அழகர் மண்டகப்படிகளில் எழுந்தருள பணம் செலுத்த வேண்டும். ஆனால், தேனூர் மண்டபத்தில் அழகர் எழுந்தருள, கோயில் சார்பில் தேனூர் கிராமத்துக்கு பணம் வழங்கப்படும். பொன், வெள்ளி என முன்பு வழங்கப்பட்டது.

தற்போது கோயில் நிர்வாகம் ரூ. 11 வழங்குகிறது. எங்கள் கிராமத்தை அரசே கவுரவப் படுத்துவது பெருமையாக உள்ளது. எங்கள் ஊரிலுள்ள சக்திவாய்ந்த சுந்தரவள்ளியம்மன் கோயில் திருவிழாவின்போது ஊர்வலம் நடக்கும். அப்போது பள்ளிவாசல் முன்பு அம்மனுக்கு முஸ்லிம்கள் மரியாதை செய்வர். அழகரின் ஊர் என்பதால், அரசு ஆவணங்களிலேயே தேனூரில் மதுக்கடை உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பதாக குறிப்பு இருக்காது.

எங்கள் ஊரில் மது விற்கப்படுவதில்லை. கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை. அழகருக்கு மரியாதை செலுத்தும் நோக்கில், இந்த கட்டுப்பாட்டை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறோம். மேலும் வெள்ளைக்குதிரையில் ஏறிவரும் அழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், யாருமே எங்கள் ஊருக்குள் வெள்ளைக் குதிரையில் ஏறுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x