Published : 12 Nov 2019 15:52 pm

Updated : 12 Nov 2019 15:54 pm

 

Published : 12 Nov 2019 03:52 PM
Last Updated : 12 Nov 2019 03:54 PM

போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் அடையாளம் தெரிந்தது: கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா

maoist-identifies-woman-killed-in-police-encounter-ajitha-from-kanyakumari
அஜிதா

கன்னியாகுமரி

கேரளாவில் சில வாரங்களுக்கு முன் போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அந்தப் பெண் மாவோயிஸ்ட் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தற்போது அடையாளம் தெரிந்துள்ளது.

1972-களில் நக்சல்களுக்கு எதிராக என்கவுன்ட்டர் எனும் முறையை தமிழக போலீஸார் கையிலெடுத்தனர். இதேபோன்று பல மாநிலங்களில் அரசுக்கெதிராக குழுக்களாக இயங்கும் மாவோயிஸ்டுகளைக் கைது செய்வது, என்கவுன்ட்டர் செய்வது தொடர்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா என ஒருங்கிணைப்புடன் மாவோயிஸ்டுகள் செயல்படுகின்றனர்.

தமிழகம், கேரளம், ஆந்திர எல்லையில் செயல்படும் முச்சந்திப்பு எனும் இடத்தில் செயல்படும் அமைப்பு மூன்று மாநில போலீஸாருக்கும் சவாலான அமைப்பாகும். இதுதவிர மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகளால் நிறுவப்பட்டுள்ள ‘பவானி தளம்’ அமைப்பும், அரசால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளின் ‘மேற்குத் தொடர்ச்சி மலைப்பிராந்திய சிறப்பு மண்டலக் குழு’வும் இயங்கி வருகின்றன.

மணிவாசகம்

மாவோயிஸ்டுகளைப் பிடிக்க ‘தண்டர் போல்ட்’ எனும் சிறப்பு கமாண்டோ படைப்பிரிவை கேரள அரசு வைத்துள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி என்ற அடர்ந்த வனப்பகுதியில் ‘தண்டர்போல்ட்’ என்ற அதிரடிப்படை போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் ‘மேற்குத்தொடர்ச்சி மலை பிராந்திய சிறப்பு மண்டலக் குழு’ முக்கிய உறுப்பினரும், தமிழக அரசால் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வரும் மணிவாசகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் மாவோயிஸ்டுகளும், ஸ்ரீமதி என்கிற பெண் மாவோயிஸ்டும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் ஸ்ரீமதி என்று அழைக்கப்படும் பெண் மாவோயிஸ்ட் இயக்கத்துக்குப் புதியவர் என்பதால் அவர் குறித்து ஆவணம் எதுவும் போலீஸாரிடம் இல்லை. மணிவாசகம் தவிர, சுரேஷ் (எ) அரவிந்தன் மற்றும் கார்த்திக் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். கார்த்திக் சென்னை சிஐடி நகரைச் சேர்ந்தவர் என கேரள போலீஸார் கண்டறிந்துள்ளனர். கார்த்திக் தேனி மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்.

அஜிதாவின் தாயார் சொர்ணம்

ஆனால் பெண் மாவோயிஸ்ட் யார் எனத் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் அவர் குமரி மாவட்டம் நிலப் பாறை பகுதியைச் சேர்ந்த அஜிதா எனத் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அஜிதாவின் தாயார் சொர்ணம் அங்குள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“எனக்கு அஜிதா உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே என் கணவர் இறந்துவிட்டார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினேன். அஜிதாவை பாதிரியார் ஒருவர் 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதன்பின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ படித்தாள்.

மேல்படிப்புக்கு சென்னை சென்றவள் படிப்பை முடிக்கவில்லை. 2014-ம் ஆண்டு மீண்டும் மதுரையில் படிப்பைத் தொடர்ந்தாள்.
அதே ஆண்டு 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னைத் தொடர்பு கொண்ட அஜிதா, 'என்னிடம் செல்போன் இல்லை. ஆகவே போன் செய்யவேண்டாம். நானே தேவைப்பட்டால் தொடர்புகொள்கிறேன்' என்று கூறிவிட்டு போனைத் துண்டித்துவிட்டாள்.

அஜிதா ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால் நானும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சில நாட்களில் எங்களைத் தொடர்பு கொண்டவள் படிப்பைவிட்டுவிட்டு வேலை செய்வதாகத் தெரிவித்தாள். வேலை எதற்கு பார்க்கிறாய், ஊருக்குக் கிளம்பி வா என சத்தம்போட்டேன். ஆனால் அஜிதா வர மறுத்துவிட்டாள்.

அஜிதாவின் குமரி இல்லம்

அதன்பின்னர் என்னுடனான தொடர்பையே துண்டித்துக் கொண்டாள். அஜிதா என்ன ஆனாள், எங்கிருக்கிறாள் என்று எதுவுமே கடந்த 5 ஆண்டுகளாகத் தெரியவில்லை. இந்த நேரத்தில் கடந்த சனிக்கிழமை என்னைத் தொலைபேசியில் அழைத்த ஒருவர், கேரள மாநிலத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதில் உயிரிழந்த பெண் உங்கள் மகள் என்று தெரியவந்துள்ளது.

எனவே கேரளாவுக்கு வந்து உடலைப் பார்த்து அடையாளத்தைக் கூறி உடலைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறினார். எனது மகளுடனான என் தொடர்பு 2014 -ம் ஆண்டுக்குப் பின் துண்டிக்கப்பட்டுவிட்டது.

அதற்கு பிறகு அவள் எங்களிடம் பேசியதே இல்லை. இப்போது அவள் நக்ஸலைட், சுட்டுக் கொல்லப்பட்டாள் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் வறுமையில் வாடும் நான் கேரளா போய் அது அஜிதாதானா என்று அடையாளம் காட்டும் அளவுக்கு வசதி இல்லை.

அரசு உதவி செய்தால் அங்கு சென்று உயிரிழந்தது என் மகள்தானா என்று பார்த்துச் சொல்வேன்” என்று சொர்ணம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் படிக்கச் சென்ற இடத்தில் அதிதீவிர இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அஜிதா, பின்னர் அவர்கள் இயக்கத்தில் இணைந்துள்ளார். குடும்பம் , உறவு என்று இருந்தால் இயக்கத்தில் வேலை செய்ய முடியாது என்று குடும்பத்துடனான உறவைத் துண்டித்துள்ளார். இந்நிலையில் மோதலில் கொல்லப்பட்ட அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்தான் அஜிதா என்று எப்படி கண்டுபிடித்தார்கள் என கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அவர் அஜிதா தான் என புகைப்படத்தை வைத்து உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நக்சலைட்டுகள் பல பெயர்களில் உலாவுவார்கள் என்பதால் ஸ்ரீமதி என்கிற பெயர் அவரது பெயராக இருந்துள்ளது. இதன் மூலம் கேரள போலீஸாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த நக்சல்கள் எனத் தெரியவந்துள்ளது.


Maoist identifiesWoman killedPolice encounterAjithaKanyakumariபோலீஸ் என்கவுன்ட்டர்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட்அடையாளம் தெரிந்ததுகன்னியாகுமரிஅஜிதா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author