Published : 11 Nov 2019 08:23 AM
Last Updated : 11 Nov 2019 08:23 AM

அரசு துறைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள ‘ஜெம்’ நிறுவனம்: எம்எஸ்எம்இ நிறுவனங்கள், வணிகர்கள் மத்தியில் வரவேற்பு

ப.முரளிதரன்

சென்னை

அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள ‘ஜெம்’ என்ற இ-மார்க்கெட் நிறுவனத்தில் வணிகம் செய்வதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. இது வணிகர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அரசு நிறுவனங்களுக்குத் தேவையான பேப்பர், பென்சில், நாற்காலி முதல் ஆயுதங்கள் வரை அனைத்தையும் கொள்முதல் செய்வதற்காக இந்தியா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை 1922-ம் ஆண்டு தொடங்கியது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பொது பொருட்கள் மற்றும் அகற்றல் இயக்குநரகம் (Directorate General of Supplies and Disposals) என்ற பெயரில் இந்நிறுவனம் மாற்றி அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் பொருட்களை கொள்முதல் செய்வதில் நிறைய முறைகேடுகளும், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும் இருந்ததால் இந்நிறுவனம் மூடப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு இ-மார்க்கெட் நிறுவனமான ‘ஜெம்’ (GeM – Government e-Marketplace, https://gem.gov.in/) நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்படுவதுபோல் இந்நிறுவனம் செயல்படுகிறது.

இதுகுறித்து, ‘ஜெம்’ நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது:அரசுத் துறைகள் தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய வழங்கும் ஒப்பந்தங்களை, முன்பு குறைவான நிறுவனங்களே எடுத்து வந்தன. அதனால் அவர்கள் அளிக்கும் விலைக்குத்தான் ஒப்பந்தங்களை எடுக்க முடியும். ஆனால், தற்போது, ஆன்லைன் முறையில் பதிவு என்பதால், ‘ஜெம்’ நிறுவனத்தில் ஏராளமான நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. எனவே, முன்பைவிட குறைவான விலைக்கு நிறைய பொருட்களை கொள்முதல் செய்ய முடியும்.

அரசுத் துறைக்கு பொருட்களை அனுப்பினால், அதற்கான பணம் கிடைக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், ‘ஜெம்’ நிறுவனம் மூலம் பொருட்களை விற்றால், அதற்கான பணம் சில நாட்களுக்குள் தானாகவே வந்துவிடும். ‘ஜெம்’ நிறுவனத்தில் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்களும், சேவை நிறுவனங்களும் பதிவு செய்துள்ளனர். 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன.

170 பொதுத்துறை நிறுவனங்கள்

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன. இதுவரை ரூ.37,320 கோடிக்கு மேல் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. 14.53 லட்சம் பொருட்களும், 19 ஆயிரம் சேவைகளும் இதில் கிடைக்கின்றன. தற்போது, நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் 170 பொதுத்துறை நிறுவனங்கள் ‘ஜெம்’ நிறுவனம் மூலமாகத்தான் பொருட்களை கொள்முதல் செய்கின்றன.

மேலும், பழைய முறையில் அரசு ஒப்பந்தங்கள் குறித்து ஒப்பந்ததாரர்கள் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசி பெற முடியும். இதில் முறைகேடுகள் நடந்து வந்தன.

28 மாநிலங்களுடன் ஒப்பந்தம்

ஆனால், ‘ஜெம்’ நிறுவனத்தில், ஒருவருக்கு ஆர்டர் வழங்கப்பட்டால் மட்டுமே அது எந்த நிறுவனம், யார் என்பதெல்லாம் தெரியவரும். எனவே, முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து ஆர்டர்களை பெற முடியாது.

‘ஜெம்’ நிறுவனத்தில் பொருட்களை வாங்கி, விற்க வணிகர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தமிழகம் உட்பட 28 மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

‘ஜெம்’ நிறுவனம் குறித்து அறிந்துகொள்ள, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் எங்கள் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, வணிகர்கள் மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இதைப் பார்த்து இத்தளத்தில் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

அதோடு, வணிகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அரசுக்கு பொருட்களை விற்பனை செய்ய எந்த ஒரு அரசு அலுவலகத்துக்கும் அலைய வேண்டியதில்லை. பொருட்களை விநியோகம் செய்த அடுத்த பத்து நாட்களுக்குள் அவர்களுக்கான பணம் கிடைத்து விடும். இச்சேவையை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x