Published : 09 Nov 2019 09:22 AM
Last Updated : 09 Nov 2019 09:22 AM

அயோத்தி வழக்கு தீர்ப்பு: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை

அயோத்தி தீர்ப்பு வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார், சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த மாதம் 16-ம் தேதி நிறை வடைந்தன. முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட் டது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தீர்ப்பை ஒட்டி, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாவண்ணம் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் டிஜிபி அறிக்கையில் போலீஸார் அனைவருக்கும் விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவு போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் உடல் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கலவரம் மூளும் அபாயம் இல்லை என்றாலும் முக்கியப் பதற்றமான மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனையை போலீஸார் நடத்தி வருகின்றனர். வாகனங்கள் அனைத்து கடுமையான சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. எல்லையோர மாவட்டங்கள், பிரச்சினைக்குரிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிற மதத் தலைவர்கள், முக்கிய அமைப்புகளின் தலைவர்களை காவல்துறை அதிகாரிகள் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தீர்ப்பு எப்படி வந்தாலும் கொண்டாட்டங்களோ, துக்கமோ அனுசரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் பற்றி உடனுக்குடன் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி உட்பட முக்கியப் பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியிருந்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அருகில் காவல் நிலையங்களுக்கோ தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் தினகரன், பிரேமானந்த் சின்ஹா ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு மேற்பார்வையில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொண்டுவரும் லக்கேஜ்கள், பார்சல் பொருள்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் வழக்கம்போல் அமைதியாக இயல்பு வாழ்க்கை நடைபெறும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x