Published : 09 Nov 2019 08:39 AM
Last Updated : 09 Nov 2019 08:39 AM

ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம்- ஆட்டோ ஓட்டுநர் மகள் சுப்ரஜா சாதனை

சர்வதேச அளவில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் நடந்த ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சுப்ரஜா. உடன், அவரது தாய், தந்தை. படம்: வி.சீனிவாசன்.

வி.சீனிவாசன்

சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பெருமாள். இவரது மனைவி பார்வதி. இவர்களின் மகள் சுப்ரஜா (17), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார். ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தேசிய அளவில் தாயார் பார்வதி பதக்கங்களை வென்றுள்ளார். தனது மகள் சுப்ரஜாவையும் ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் சாதனை படைக்க பயிற்சி அளித்து வந்துள்ளார். 8-ம் வகுப்பில் இருந்தே, ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டிக்கு சுப்ரஜா தயாராகி வந்துள்ளார். மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களை குவித்த சுப்ரஜா, தேசிய அளவிலான போட்டிகளிலும் மகுடம் சூடியுள்ளார்.

2017-ம் ஆண்டு நடந்த ஆசிய அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தனி நபர் பிரிவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும், மூன்று பேர் பங்கேற்கும் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டுமென்ற விடா முயற்சியுடனும், தாயார் பார்வதியின் ஊக்கத்தின் காரணமாகவும் போட்டியில் பங்கேற்க தினமும் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த நவம்பர் 1-ம் தேதி ரஷ்யா நாட்டின் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், இந்தியா சார்பில் சுப்ரஜா பங்கேற்றார். இந்தியாவில் இருந்து 8 பேர் கலந்துகொண்ட நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து 1500 பேர் வரை பங்கேற்றனர். இதில், தனிநபர் ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, சுப்ரஜா வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பினார்.

இதுதொடர்பாக சுப்ரஜா கூறும்போது, ‘‘சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில், மாஸ்கோவில் நடந்த ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் பங்கேற்றேன். 1.47 நிமிடங்களில் இசைக்கு தக்கவாறு உடல்களை வளைத்து, நடனமாடி வெற்றிக்கனி பறித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு செல்ல அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க அங்கு செல்ல ரூ.1.5 லட்சம் தேவைப்பட்டது. பலரின் உதவியால் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தாயகம் திரும்ப முடிந்தது.

ஆனால், சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க கூடிய திறமையுடன் பல இளம் வீரர், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால், அவர்கள் பொருளாதார வசதியின்மையால் பங்கேற்க முடியாமல், தங்களது திறமையை வெளி உலகுக்கு காண்பிக்க முடியாத சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற திறன்மிக்க வீரர்களை ஊக்கப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு சென்று வர அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்தால், உலக அளவிலான போட்டியில் நம் வீரர், வீராங்கனைகள் சாதிப்பது நிச்சயம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x