Published : 09 Nov 2019 07:58 AM
Last Updated : 09 Nov 2019 07:58 AM

7 நாளில் 7 ஆயிரம் பேர் வருகை: கீழடியில் தொல்பொருட்களை காண மக்கள் ஆர்வம் - ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாட்டுக் குழுவினரும் பார்வையிட்டனர்

என்.சன்னாசி

மதுரை 

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சியை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த 5 கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகத்துடன் கீழடியில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாக கீறல் எழுத்து பானை ஓடுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் செங்கல், உறை கிணறு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட பொருட் கள் கிடைத்துள்ளன. தொல்பொருட் களை கீழடி பகுதியிலேயே பொது மக்களின் காட்சிக்காக வைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தற்காலிகமாக மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கீழடி அகழாய்வுப் பொருள் அருங் காட்சியகம் வைக்க, மாநிலத் தொல்லியல் துறை ஏற்பாடு செய்தது. தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் முதல் மாடியில் 3 அறைகளில் இக் கண்காட்சியை கடந்த நவ.1-ம் தேதி தமிழக முதல்வர் கே. பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ் எழுத்து பொறித்த மண் கல ஓடுகள், குறியீடு, நுண் வினை மட்கலன்கள், சங்கு வளையங்கள், காசுகள், சுடுமண் விலங்கு, மனித உருவங்கள், நெசவுக்குப் பயன் படும் தக்களிகள், விளையாட்டுக் காய்கள், நீர் மேலாண்மை மாதிரி என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வைக்கப்பட் டுள்ளன. மேலும், மதுரையின் தொன்மை வரலாறு, தொல்லியல் கள ஆய்வுகள், தொல்லியல் அகழாய்வு, கீழடி அகழாய்வு, வைகை ஆறு எனும் தலைப்பில் தகவல்கள் அடங்கிய பேனர்களும் இடம் பெற்றுள்ளன.

தினமும் காலை 11 முதல் இரவு 7 மணி வரை அனைத்து நாட்களிலும் பார்வையிடலாம். நுழைவுக் கட்டணம் இல்லை. தொல் பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்க, தொல்லியல் அலுவலர் சக்திவேல் உட்பட 5 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை பள்ளி மாணவர்கள் அதிகம் வந்துள்ளனர். தென்காசி, திருப்பூர், முசிறி, திருச்சி போன்ற வெளியூர்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஜெர்மனி நாட்டில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினரும் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பின்னர் அகழாய்வு நடந்த கீழடிக்குச் சென்று பார்வையிட்டனர். இதுவரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இதுபற்றி தொல்லியல் அலுவலர்கள் கூறியதாவது: மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி, பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். தமி ழகம், மதுரையிலுள்ள சுற்றுலா வழிகாட்டிகளின் அலைபேசிகளை இணைத்து வாட்ஸ் ஆப் குரூப் தொடங்கி உள்ளோம். குறிப்பாக மாணவர்கள் அதிகம் வர வேண் டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x