Published : 08 Nov 2019 09:57 AM
Last Updated : 08 Nov 2019 09:57 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. சித்திரைத் திருவிழாவும், ஆவணி மூலத் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

இக்கோயிலில் தரிசனம் செய்வதற்கு வெளியூர்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். திருவிழாக் காலங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

திருப்பதியைப்போல் மீனாட்சி அம்மன் கோயிலிலும் தீபாவளி (அக்.27) முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இது தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் நா.நடராஜன் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இத்திருக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு தினமும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி இன்று (நவ.8) காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

தெற்கு ஆடி வீதியில் உள்ள அறையில் லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் மணிக்கு 3 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கலாம். லட்டு தயாரிக்கும் பணியில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். சுவாமி சன்னதி முன்பாக லட்டு வழங்கும் பணியில் 2 பேர் ஈடுபடுவர். ஒவ்வொரு பக்தருக்கும் 30 கிராம் லட்டு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x