Published : 08 Nov 2019 09:43 AM
Last Updated : 08 Nov 2019 09:43 AM

'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலி: திருமருகல் அருகே குத்தாலத்தில் அரசுப் பள்ளியில் இருந்த ஆழ்துளைக் கிணறு மூடல் 

நாகப்பட்டினம் 

‘இந்து தமிழ்' நாளிதழ் செய்தி எதிரொலியாக குத்தாலம் நடுநிலைப் பள்ளியில் இருந்த ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 15 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த 160 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நாளடைவில் தண்ணீர் வற்றிவிட்டதால் அதை மூடிவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சமையலறை கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பள்ளம் தோண்டியபோது, ஆழ்துளைக் கிணறு இருப்பதைப் பார்த்த அவர், மணல் மூட்டையை வைத்தும், மண்ணைக் கொட்டியும் மூடிவிட்டு அதன் அருகிலேயே சமையலறை கட்டிடத்தை கட்டிவிட்டார்.

இதையறியாத பள்ளி மாணவர்கள் அந்த இடத்தில் தங்கள் செருப்புகளை விட்டுவிட்டு வகுப்புகளுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், பள்ளியில் சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறு குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடந்த நவ.6-ம் தேதி ‘இந்து தமிழ்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து ஆழ்துளைக் கிணற்றை பார்வையிட்டனர். பின்னர் ஆழ்துளைக் கிணற்றை மேலும் ஆழப்படுத்தி சிமென்ட், செங்கற்களைப் போட்டு மூடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x